திலீபன் நினைவேந்தல் : அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றச் செயற்பாடுகளை பொலிஸார் ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அவர்கள் எப்போது சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை, சட்டத்தை மீறும் செயலாகக் பொலிஸ் திணைக்களம் கருதுகிறதா? சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்துக்களைப் பதிவு செய்யும் நபர்களை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்கிறதா?

அப்படியெனில், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றச் செயற்பாடுகளை முன்னெடுக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மேலும், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது எப்போது?இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காகவே அப்பாவித் தமிழ் மக்கள், குறிப்பாக ஆனந்த சுதாகரன் போன்றவர்கள் இதுவரை விசாரணையின்றி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது ஏன்?

இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கைச் பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றார்களா?

வட மாகாணத்திற்குள் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் என்ற வகையில் நீங்கள் திருப்தியடைகின்றீர்களா? என்றார்.

Related Posts