இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை, இன்று வெள்ளிக்கிழமை (17)காலை 10.15க்கு, பின்னவல பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டது.
பின்னவல யானைகள் சரணாலயத்தை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மிருகக்காட்சிசாலையே, இலங்கையின் இரண்டாவது மிருகக்காட்சிசாலையும் ஆகும்.
மிருகங்களை கூண்டுகளில் அடைத்து காட்சிப்படுத்தும் கொள்கையிலிருந்து மாறுபட்ட நிலையில், சுதந்திரமாக மிருகங்கள் நடமாடக்கூடிய வகையில் இந்த மிருகக்காட்சிசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த மிருகக்காட்சிசாலையின் நிர்மாணப் பணிகளின் முதற்கட்டமாக, இலங்கையில் மாத்திரம் காணப்படும் பாரியளவிலான மிருகங்களை சுமார் 140 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட திறந்தவெளியில் விடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கைக்கு மாத்திரமே உரித்தான சிறுத்தைகள், கரடிகள், மான்கள், மரைகள் என பல்வேறு வகையான மிருகங்கள் காணப்படுகின்றன. இவை, “மான்கள் ஆரணியம்”, ”கரடிகள் ஆரணியம்”, சிறுத்தைகள் ஆரணியம்”, ”முதலைகள் ஆரணியம்” என பல்வேறு ஆரணியங்களாக பிரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த மிருகக்காட்சிசாலையை சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹஸீம் ஆகியோர் திறந்துவைத்தனர்.