Ad Widget

திரைமறைவு கூட்டங்களுக்கு விளக்கமளிக்கிறார் சுமந்திரன்

புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புக்கள் மீதுள்ள தடைகளை நீக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் சந்திப்புக்களை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் பொய்யான பிரச்சாரம் செய்துவரும் நிலையில் நாங்கள் திரைமறைவான சந்திப்புக்களை செய்து வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, வெளிநாட்டில் நடத்தும் இரகசிய கூட்டங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் கூறிவந்தனர்.

சர்வதேச விசாரணையில் இருந்து முன்னைய ஆட்சியாளர்களையும் படைத்தரப்பையும் காப்பற்றுவதற்காக நடைபெறுகின்றதா? என கூட்டமைப்பினரும், புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்புக்களின் தடைகளை நீக்குவதற்காக நடைபெறுகின்றதா? என எதிர்க்கட்சித் தலைவரும் தங்கள் சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.

யாழ். நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை (12) வந்திருந்த சுமந்திரனிடம், ஊடகவிலாளர்கள் இது தொடர்பில் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களின் தடைகளை நீக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் நானும், வெளிவிவகார அமைச்சரும் இணைந்து வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற கூட்டத் தொடரில் கூறியிருந்தார். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தனது பதிலை இன்று நாடாளுமன்றத்தில் பதிலை சமர்ப்பிப்பார்.

கூட்டம் முடிவடைந்த பின்னர் நாங்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தோம். எது சம்பந்தமான கூட்டம் என கூறியுள்ளோம். காணிகள் விடுவிக்கப்படுதல், விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைத்துக்கொடுத்தல், அதற்கான பணங்கள் பெற்றுக்கொள்ளல், அரசியல் கைதிகள் விடுதலைகள் சம்பந்தமாக பகிரங்கப்படுத்தப்படாத சம்பாஷனையில் ஈடுபடவிருந்தோம். அது பகிரங்கப்படுத்தப்படாமலேயே இருந்திருக்க வேண்டும்.

மேற்படி தமிழ் மக்கள் பிரச்சினைகள் தெற்கில் அரசியல் மயப்படுத்தி, புலிகளுக்கு மீண்டும் இடங்கொடுக்க தற்போதைய அரசாங்கம் முனைகின்றது என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் முன்வைத்து வருகின்றனர். இதன்காரணமாகவே இந்தப் கூட்டங்களை திரை மறைவில் நடத்தியிருந்தோம். ஆனால் அந்தச் செய்தி வெளியில் கசிந்துள்ளது.

பெரிய சர்ச்சையாக கிளம்பியுள்ளது. சர்ச்சையை தீர்ப்பதற்கான பதிலை வழங்கியுள்ளோம். ஆனால் என்ன பேசினோம் என்ற முழுமையான விடயங்களை நாங்க்ள கூறாமாட்டோம் என்றார். பத்திரிகையாளர் முன்பாக வைத்து எங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்துவது இல்லை. அதற்கான காரணங்கள் இருக்கின்றது. கஸ்டமான, சவாலான அரசியல் சூழ்நிலையில் இருப்பதனால் அனைத்தையும் வெளிப்படுத்த முடியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அனுமதிக்காத எந்தவொரு கூட்டத்துக்கும் நான் செல்வதில்லை. நாங்கள் பங்குபற்றும் கூட்டம் தொடர்பில் கூட்டமைப்பிலுள்ள அனைவருக்கும் நாங்கள் கூறவில்லை’ என கூறினார்.

Related Posts