நடிகர் ரஜினிகாந்தின் ஈழத்து விஜயத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஈழத்து கலைஞர்களால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டம், யாழ்.நல்லூர் முன்றலில் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
லைக்கா நிறுவத்தினர் சார்பில் வடக்கில் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டிருந்த நிலையில், திருமாவளவன் மற்றும் தி.வேல்முருகன் உள்ளிட்டோரின் வற்புறுத்தல் காரணமாக குறித்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனை பகிரங்க அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ள ரஜினிகாந்த், தாம் ஈழத்தில் கால்பதிக்க ஆவலுடன் காத்திருந்ததாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் அமைந்தால் அவற்றையும் அரசியலாக்கி தன்னை தடுத்து விட வேண்டாமென்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இலங்கை விஜயத்தை திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் அரசியலாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதோடு, நடிகர் விஜயகாந்த் இலங்கைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கவுள்ளதாக ஈழத்துக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
