திருநெல்வேலி சைவச் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: சம்பவத்தை மூடி மறைக்க நிர்வாகம் முயற்சி

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவச் சிறுவர் ஆண்கள் இல்ல மாணவன் ஒருவன் மீது, அங்கு கற்பிக்க வந்த ஆசிரியர் மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தியதில் அம்மாணவன் தலையில் படுகாயமடைந்துள்ள சம்பவம்  இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தை மூடிமறைக்கும் வகையில் மாணவனை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்காது தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சைவச் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு இரவு நேரக் கற்பித்தல் பணிகளுக்காக, இல்ல முகாமைத்துவ சபையின் முறையான அனுமதியின்றி, சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கல்வித் திட்டப் பணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் குறித்த ஆசிரியர் முறையற்ற விதத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த ஆசிரியரின் தவறான நடத்தைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இல்லத்தின் முகாமைத்துவ சபையின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தபோதிலும், சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மௌனம் காத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த ஆசிரியரினால் இல்ல மாணவன் ஒருவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவனை, சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்காது, சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இணுவில் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்துள்ளனர்.

 அரசு வைத்தியசாலையில் அனுமதித்தால் காவற்துறை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலேயே, சம்பவத்தை மூடிமறைக்கும் நோக்கில் மாணவன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பில் உடனடியாகக் காவற்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டு, சிறுவர் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சைவ வித்தியா விருத்திச் சங்க நிர்வாகம் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், விடயம் தெரிந்திருந்தும் சிறுவர் நன்னடத்துப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில மாதங்கள் முன்பாக மேற்படி சங்கத்தின்  நிர்வாக முறைகேடுகளை் குறித்து நடவடிக்கை எடுக்க முயற்சித்த  சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் பொதுச்சபைச் செயலாளர் தவரூபன்  மீது, நிர்வாகத்தைச் சேர்ந்த சிவரூபன்  பணிப்பாளர் சபைக்கூட்டத்தில்  தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாகவும் அதன் பின்னராக பொதுச்செயலாரை தலைவர் செயற்படாமல் தடுத்து வைத்துள்ளதாகவும் சட்டவிரோதமாக  பதில் செயலாளாக சிவரூபனை  நியமித்து முறைகேடுகளை தொடர்வதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்ட முறையற்ற நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கத்தின் செயலாளர் கேட்டுள்ளார். மாணவன் மீதான தாக்குதல் தொடர்பில் சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம், சிறுவர் நீதிமன்றம் மற்றும் வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் எனக் கோரி, உரிய தரப்பினருக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதம் மூலம் முறைப்பாடுகளை வழங்கியுள்ளதாகச் சங்கத்தின் பொதுச்சபைச் செயலாளர் தவரூபன் மேலும்  தெரிவித்துள்ளார்.

Related Posts