Ad Widget

திருநெல்வேலி சிறுவன் விபத்து மரணம் மன்னிக்க முடியாத பாவச் செயல்: நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியபோது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் மன்னிக்க முடியாத பாவச் செயல் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய விபத்து மரணங்கள் ஏற்படாத வண்ணம் பேரூந்து சாரதிகளுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருநெல்வேலி சந்தியில் ஒன்றையொன்று முந்திச் செல்வதற்காக இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு வேகமாக ஓடியபோது, எதிரில் வந்த முச்சக்கர வண்டி மீது மோதியதில் சிறவன் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய தாயார் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து மரணம் தொடர்பில் பேரூந்து சாரதி ஜெயபாலச்சந்திரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

யாழ் மேல் நீதிமன்றத்தில் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி இளஞ்செழியன் எதிரிக்கு பிணை வழங்க மறுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

வாகன விபத்து மரணங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. போட்டிக்கு வாகனம் ஓடுவது. கவனமின்றி வாகனங்களைச் செலுத்துவது போன்ற காரணங்களினால் அப்பாவிகள் உயிரிந்திருக்கின்றார்கள். இதனை அனுமதிக்க முடியாது. வாகன விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக சாரதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். ஒரு மாதத்தின் முன்னர் வைத்தியர் ஒருவர் உயிரிழந்தார். வவுனியா வைத்தியர் ஒருவரும் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கில் முந்திச் செல்ல வேண்டும் என்பதற்காக வீதியை முழுமையாக அடைத்துக் கொண்டு போட்டிக்கு பேரூந்துகளை ஓட்டிச் சென்றபோது திருநெல்வேலி சந்தியில் எதிரில் வந்த முச்சக்கர வண்டியொன்றை மோதி, அதில் பயணம் செய்த சிறுவன் ஒருவரைப் பந்தாடி, அவருடைய தாயாரைப் படுகாயப்படுத்தியதுடன், புதிதாகத் திறக்கப்பட்டிருந்த வங்கிக் கட்டிடத்தின் முகப்பை உடைத்து விபத்தை ஏற்படுத்தியதாக சாரதிக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்து மரணம் மன்னிக்க முடியாத பெரும் பாவச் செயலாகும்.

முந்திச் சென்றுவிட வேண்டும் என்பதற்காக போட்டி போட்டு ஓடுகின்ற அனைத்து வானகங்களும் கைப்பற்றப்படும். அந்த வாகனங்களின் வழி அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும். அத்தகைய வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் ரத்துச் செய்யப்படும்.

மதுபோதையில் வாகனமோடடுவது, அதிவேமகாக ஓட்டுவது, பூட்ட்பபட்ட ரயில் கடவைகளில் புகுந்து மோட்டார் சைக்கிள் ஓடுவது போன்ற செயல்களுக்கு தண்டனை அதிகரிக்க்பபடும்.

விபத்து மரண சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்கள் நிதானமாகவே பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், திருநெல்வேலி சிறுவன் விபத்து மரண வழக்கில் பிணை வழங்குவதா இல்லையா என்பது பற்றி எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

Related Posts