Ad Widget

திருநாவுக்கரசரின் குருபூசைத் தினத்தில் தண்ணீர்ப் பந்தல்கள்

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மக்கள் அவதியுறுவதை அடுத்து, திருநாவுக்கரசரின் குருபூசைத் தினமான எதிர்வரும் இரண்டாம் திகதி சைவ மகா சபையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்களின் தாகம் தீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

வடமாகாணத்தில் யாழ். நகர், காரைநகர் மற்றும் தெல்லிப்பழையிலும் கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும் இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்படவுள்ளன.

அப்பூதியடிகள் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் திருநாவுக்கரசரின் பெயரால் ஊர்கள் தோறும் அமைத்த தண்ணீர்ப் பந்தல்களை நினைவுபடுத்தும் நோக்கிலும் இளைஞர்கள் மத்தியில் தொண்டு மனப்பான்மையை ஏற்படுத்தும் நோக்கிலும் அந்தந்த இடங்களிலுள்ள சைவ மகா சபையின் சிவத்தொண்டர்களால் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், திருநாவுக்கரசரின் பெயரால் தண்ணீர்ப் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்கும் பணியை முன்னெடுக்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஆலய பரிபாலன சபைகள், சைவ அமைப்புகள் மற்றும் தொண்டு அமைப்புகளை சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அன்றையதினம் சைவ மகா சபை, இந்து சமயப் பேரவை மற்றும் சைவ நற்பணி மன்றங்கள் இணைந்து கந்தர்மடத்திலுள்ள இந்து சமயப் பேரவையில் திருநாவுக்கரசரின் போற்றித் திருத்தாண்டக மந்திரங்களால் சிவபெருமானை அர்ச்சனை செய்யும் வழிபாடும் நடைபெறும் என்றும் சைவ மகா சபை அறிவித்துள்ளது.

Related Posts