Ad Widget

திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி: புலனாய்வுப்பிரிவுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

திருக்கேதீச்சரம் மனிதப்புதைகுழிகள் இருக்கும் பகுதியில் முன்னர் கிராம மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாடு இருந்ததற்கான பதிவுகள் இருக்கவில்லை என நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்த மன்னார் பிரதேச சபைத்தலைவரிடம் மன்னாரில் வைத்தே வாக்குமூலம் பதிய வேண்டும் என்று நீதிமன்றம் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

mannar_mass_grave

அவரை, புலனாய்வு பிரிவினர் கொழும்பில் உள்ள நாலாம் மாடிக்கு வருமாறு அழைத்திருந்த போதிலும் அவர் அங்கு செல்லாத நிலையிலேயே, அவரது சார்பில் சட்டத்தரணிகள் இந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் காணாமல்போனோர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவினரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், அந்த மனிதப் புதைகுழியைத் தொடர்ந்தும் தோண்ட வேண்டும் என்றும், அதன் அருகில் முன்னர் மக்களுடைய பயன்பாட்டில் இருந்து பின்னர் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற கிணறு ஒன்று தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அந்தக் கிணறு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அந்தப் பகுதியில் முன்னர் பொது மயானம் அல்லது இடுகாடு எதுவும் இருந்ததில்லை என்பதற்கான ஆதாரங்களாக மன்னார் ஆயர் உட்பட மூன்று பேரிடமிருந்து பெறப்பட்டுள்ள சத்தியக்கடதாசிகளையும் இந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை அக்டோபர் மாதம் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts