திருகோணமலையை தனிச் சிங்கள மாவட்டமாக மாற்ற 30 ஆண்டுத் திட்டம்! – சுரேஸ் பிரேமச்சந்திரன்

திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற அரசாங்கம் 30 ஆண்டு திட்டம் ஒன்றை 2011 ஆம் ஆண்டில் திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கு வடமத்திய மாகாண அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, மாத்தளை உட்பட பல மாவட்டங்கள் உள் வாங்கப்பட்டுள்ளன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட முன்வரைவு கருத்தறிவதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்றுக்காலை 10.30 மணியளவில் திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் திருகோணமலையின் சனத்தொகை 10 இலட்சம் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலைகள் தொழில்நுட்ப நிலையங்கள் முதலியனவற்றிற்கு தெற்கில் இருந்து சிங்கள மக்களை குடியேற்றி திருகோணமலையின் துறைமுகத்தை மையமாக வைத்து பல அபிவிருத்தித் திட்டங்களையும் தொழிற்சாலைகளையும் அமைத்து தமிழர்களை அரிதாக்கும் திட்டம் அது.

அவ்வாறான திட்டங்களை தடுக்கக் கூடிய தீர்வுகளை நாம் முன் வைக்கவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பாத்திரத்தை வகிக்கும் இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பிய இந்த மாவட்டத்தின் இவ்வாறான நிலையை நாம் சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

Related Posts