Ad Widget

திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை

நேற்று , 24/04/17 அன்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் பேரவை இணைத்தலைவர் இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் அவர்கள் ஆற்றிய உரை..

தமிழர்களின் வரலாற்றுரீதியான தாயக நிலத்தின் தலைமை நகரமானதும், இந்த இந்து சமுத்திரத்தின் பூகோள அரசியற் போட்டியின் ஒரு கேந்திரமுக்கியத்துவம் உடைய ஒரு மையப்புள்ளியாகவும் அமைந்ததுமான இந்த திருகோணமலை நகரில், நடக்கும் தமிழ் மக்கள் பேரவையின் இந்த் கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

தமிழ் மக்கள் பேரவையானது , தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அடக்குமுறைகளின் விளைவாக எழுந்துள்ள எமது அன்றாடப்பிரச்சினைகளையும், வடக்குலும் கிழக்கிலும் எழுக தமிழ் எனும் ஜனநாயக மக்கள் எழுச்சி மூலம் உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தது.

எமது அடிப்படை அரசியல் அபிலாசைகளும் அடக்குமுறையின் விளைவான அன்றாடப்பிரச்சினைகளும் எம் தாயக மக்கள் அனைவருக்கும் பொதுவானதே என்பதையும் இதில் எந்தவித பிரதேச வேறுபாடுகளும் இல்லை என்பதையும் , வடக்கிலும் கிழக்கிலும் எழுச்சியுடன் திரண்டு வந்திருந்த எமது மக்கள் , மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.

குறிப்பாக ,பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் எம்மை துண்டாட நினைப்பவர்களுக்கு இது நல்ல பதிலாகவும் அமைந்திருந்தது.

இந்த மக்கள் எழுச்சிக்காகவும் அரசியல் விழிப்புணர்வுக்காகவும் ,இலட்சியத்தின்பாற்பட்ட மக்கள் திரள்வுக்காகவும் எம்தாயகத்தின் வீதிகள் தோறும் நடந்து உழைத்த அனைவரது கரங்களையும் நாம் மீண்டும் பெருமிதத்துடன் பற்றிக்கொள்கிறோம்.

எனினும்,

மக்களை நோக்கிய எமது செயற்பாடுகள் இன்னமும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்பதே இன்றுள்ள அவசரமான தேவையாகும் என் நான் கருதுகிறேன்.

போலி வார்த்தைஜால அரசியல் மூலமும், காலம் கடத்தல்களினூடு எமது நியாயமான அரசியல் கோரிக்கைகளை நீர்த்துப்போகச்செய்யும் கபட நோக்குகளுடனும், அபிவிருத்தி எனும் போர்வையில் தேசிய அரசியலை திசைமாற்றும்முயற்சியிலும் , தற்போது பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அத்தோடு , எமது சமூகத்தின் தீர்க்கப்படவேண்டிய உள்முரண்பாடுகளை, மேலும் தூண்டி எரியவிட்டு அவற்றின் மூலம் எமது மக்களை பிரித்தாளுகின்ற செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.தெரிந்தோ தெரியாமலோ எம்மக்களில் சிலரும் துரதிர்ஷ்டவசமாக இதற்கு துணைபோகின்றனர்.

இதைவிட மோசமான ஆபத்தாக, போரின் விளைவால் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய‌ அவசியமான மனிதாபிமான செயற்பாடுகளை, போரின் மூலகாரணத்திற்குதீர்வுகாணும் முயற்சிக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்குறும் செயன்முறைக்கும் பண்டமாற்றாக கருதச்செய்யும் முயற்சிகளும் நடந்தேறிவருகின்றன.

சூழ்ச்சிகள் மிகுந்த இந்த காலப்பகுதியில், அரசியல் ரீதியாக மக்களை விழிப்பூட்டல் செய்து ஒன்றுதிரட்டவேண்டியது, மக்கள் இயக்கம் எனும் இலக்குடன் இயங்குகிற எமது பொறுப்பாகும்.அரசியல் விழிப்புணர்வு கொண்ட மக்களை எந்த சக்திகளாலும் வீழ்த்தவோ ஏமாற்றவோ முடியாது.

எனவே, இனத்தின் நன்மைகருதி, அரசியல் தொலைநோக்குடன் , கொள்கையின் பாற்பட்டு ஒன்றுபட்டு செயல்படமுன்வருமாறு முக்கியத்துவம் மிகுந்த இந்த மண்ணில் வைத்து அனைவருக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.

எம்மிடையேயான அனைத்துவித பேதங்களையும் களைந்து , தேர்தல் மைய அரசியலைத்தாண்டி, இனத்தின்நலன்கருதி, அனைவரும் கொள்கையின்வழி ஒன்றுபட்டு செய்ற்படமுன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை சார்பில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புகளையும் தொழிற்சங்கங்களையும் வேண்டுகிறேன்.

கொள்கைவழிப்பட்டு ஒன்றிணைந்த , சுயலாப நோக்கற்ற , இலக்கில் தெளிவு கொண்ட மக்களின் போராட்டங்கள் ஒரு போதும் தோற்பதில்லை என்பதை அண்மைக்காலமாக எமது மக்களே தமது நிலமீட்பு போராட்டங்களினூடு வெளிப்படுதியிருக்கிறார்கள்.

எந்தவொரு சுயலாப நோக்குகளும் அற்று , தமக்கு நீதி கேட்டு தன்னெழுச்சியாக மக்களிடமிருந்து எழுந்த மக்களின் விட்டுக்கொடுப்பற்ற போராட்டங்கள் சாதகமான பலன்களை கொடுக்கத்தொடங்கியிருக்கிறது.

அரசியல் தெளிவுடன் , எவரிலும் தங்கியிராது மக்களே தமக்கான குரல்களை எழுப்ப முன்வரவேண்டும் என்பதும் மக்கள்மயப்பட்ட போராட்டங்களே எமக்கு சாதகமான பலன்களை தரும் என்பதையும் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பம் முதலே வலியுறுத்திவந்துள்ளது.

பலவகைகளிலும் எங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் இந்த் மக்கள் போராட்டங்களுக்கு தாயக மக்கள் அனைவரும் தம்மாலான முறையில் தமது ஆதரவுக்கரங்களை நீட்டவேண்டும் என நாம் கோருகின்றோம்.

இந்த மண்ணில்வைத்து ,நாம் இன்னும் சில புரிதல்களையும்வெளிப்படுத்துவது பொருத்தமானது என கருதுகிறேன்.
தமிழ் தேசிய அரசியலை ( அரசியல் கோரிக்கைகளை )முன்னெடுத்தல் என்பது , இன்று , வெறுமனே தமிழர்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான அரசியல் ஊடாட்டம் என்ற நிலையை தாண்டியுள்ளது.

சிறிலங்கா அரசு மட்டுமல்லாது பல்வேறு தரப்புகளும் இதில் பங்குதாரகளாக உள்ளார்கள் என்பது வெளிப்படையானது. ஒவ்வொருவரும் தத்தமது நலன்களை மையப்படுத்தியே தமது நிகழ்ச்சி நிரல்களை அமைப்பார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியது.

அதுபோலவே, நாமும் எமது நலன்களை முக்கியத்துவப்படுத்தியே எமது நிகழ்ச்சிநிரலையும் அமைத்துக்கொள்ளவேண்டும். எமது நலன்களை , எமது அரசியல் அபிலாசைகளை முக்கியத்துவப்படுத்துவது அல்லது விட்டுக்கொடுக்காதிருப்பது என்பது , எவரினதும் நலன்களுக்கும் எந்தவகையிலும் எதிரானது அல்ல என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

எமது நலன்களை( எமது இருப்பிற்கான அடிப்படை அரசியல் கோரிக்கைகளை) உறுதிப்படுத்தப்படுகின்ற அனைத்து சக்திகளுடனும் நாம் ஒன்றுபட்டு நகரவே நாம் விரும்புகிறோம் என்பதையும் இந்த மண்ணில் இருந்து வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இறுதியாக , மீண்டும் ,

எமது நோக்கில் உறுதியுடன் கொள்கையின்பாற்பட்ட ஒற்றுமையுடன் செயற்பட முன்வருமாறு மக்கள் நலன் சார்ந்து தேசிய நிலைப்பாட்டுடன் செய்ற்படும் எமது மண்ணின் அனைத்து கட்சிகள் பொது அமைப்புகள் தொழிற்சங்களையும் தமிழ் மக்கள் பேரவை சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி

தொடர்புடைய செய்தி

 

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை

Related Posts