Ad Widget

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியை திருத்த வேண்டாம்!!

யாழ். ஆவரங்கால் பகுதியில் இந்திய இராணுவத்தினரின் காலத்தில் சேதமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை, மீள புனர்நிர்மாணம் செய்து அமைப்பதற்கு சிலர் முன்வந்திருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் இணைந்து அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தமது பிரதேசத்துக்கு இந்தத் தூபி தேவையில்லை என்றும், அதனால், ஏற்கனவே ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள், “தியாதி திலீபனின் தூபியைத் திருத்தவேண்டாம் – ஆவரங்கால் மக்கள் / இளைஞர்கள்” என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, எதிர்ப்பாளர்களிடம் இந்த எதிர்ப்புக்கான ஏற்பாடு குறித்து வினவிக்கொண்டிருந்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், “திலீபனின் நினைவுத் தூபி அமைப்பதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஆவரங்காலின் ஒட்டுமொத்த மக்களும் குரல்கொடுக்கவில்லை என்றும், இது ஒரு சிலரின் ஏற்பாடே என்ற தொனியில் கருத்துத் தெரிவித்தார்.

குறித்த தூபியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்பவர்கள் தொடர்பில், அப்பகுதியில் உள்ள சிலரிடம் சி.ஐ.டியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

யாழ். ஆவரங்கால் பகுதியில் சேதமாகிய நிலையில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை மீண்டும் சீரமைத்துக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்களில் முக்கியமான நபரின் வீட்டுக்குத் தேடிச் சென்ற சீ.ஐ.டியினர் விசாணை நடத்தியுள்ளனர்.

ஆவரங்கால் சர்வோதய வீதியில் உள்ள நாற்சந்தியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூவி, இந்திய இராணுவம் இலங்கையில் தரித்திருந்த காலத்தில் சேதமாக்கப்பட்டு உடைக்கப்பட்டது. பின்னர் குறித்த நினைவுத் தூபி அப்படியே இருந்தது.

தற்போது தியாக தீபம் திலிபனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நினைவுத்தூபியை புனரமைத்துத் தரும்படி தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார் என கட்சியால் அறிவிக்கப்பட்ட மணிவண்ணனிடம் அவரின் ஆதரவாளர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிணங்க, குறித்த நினைவுத் தூபியை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த 09ம் திகதி மாலை குறித்த நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தைப் பார்வையிட்ட மணிவண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினர்.

இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து அறிந்த சி.ஐ.டியினர், நினைவுத் தூபியை அமைப்பதற்கான மணிவண்ணனுடன் முன் நின்ற ஆவரங்காலைச் சேர்ந்த நபரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இரண்டு தடவைகள் குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சி.ஐ.டியினர், குறித்த நினைவுத்தூபியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்து அறிந்துகொண்டதுடன், அது தேவையற்ற வேலை எனவும் கூறிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸாரின் நடமாட்டமும் அதிகமாகக் காணப்படுகின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

எனினும், குறித்த பணி இடைநிறுத்தப்படாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts