நல்லூர் வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை அமைப்பதில் இருந்த தடை நீக்கப்பட்டுவிட்டதாக வட மாகாண சபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஏற்கனவே இப்புனரமைப்பு பணிக்காக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு வேலைகளை மாநகர சபை ஆரம்பிக்க வேண்டும் . இத்தூபியைப் புனரமைத்து பாதுகாப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இரண்டு இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருந்தார்.
எனினும் தூபியைப் புனரமைப்பதில் தடைகள் இருப்பதாக யாழ். மாநகர சபை தெரிவித்துவந்தது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தூபி அமைந்துள்ள காணி நல்லூர் ஆலயத்திற்குச் சொந்தமானது. எனவே அதனைப் புனரமைப்பதில் சிக்கல் நிலவி வருகின்றது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்ற பின்னர் தூபியின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே தூபி அமைப்பு தொடர்பில் ஆலய நிர்வாகத்தினருடன் தான் பேசிவிட்டதாக சீ.வீ.கே.சிவாஞானம் கூறினார்.
இதனையடுத்து தூபியை புனரமைத்துப் பாதுகாப்பதில் காணி தொடர்பான எந்த பிரச்சினையும் இல்லை என்பதை நான் உறுதிப்படுத்தியுள்ளேன். இதனை விளக்கி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் தூபி அமைப்பு தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் ஒதுக்கிய நிதி இவ்வருடத்தில் செலவிடப்பட வேண்டும். எனவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் திலீபனின் நினைவுத் தூபியை புனரமைத்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மாநகர சபையினர் விரைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் சிவஞானம் கோரியுள்ளார்.