Ad Widget

தியாகிகளை நினைவுகூருவதை இராணுவம், பொலிஸார் தடுக்கக்கூடாது! நாடாளுமன்றில் கூட்டமைப்பு வலியுறுத்து!!

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக உயிர்நீத்த போராளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் நேற்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன், சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்ட இந்த உரிமையை இராணுவமும், பொலிஸாரும் தடுக்க முயற்சிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அஞ்சலி செலுத்தி கோரிக்கை விடுத்த அவர், மேலும் கூறுகையில்,

“வடக்கு, கிழக்கு யுத்தத்துக்குப் பின்னரான சூழலில் 85 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்க இருக்கின்றன. இந்தக் குடும்பங்கள் வறுமைக்கு மத்தியிலேயே வாழ்கின்றன. இவற்றை முன்னேற்றுவதற்கு எந்தவித முக்கியத்துவமும், உத்தரவாதங்களும் இந்த வரவு – செலவுத்திட்டத்தில் கொடுக்கப்படவில்லை. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்தியுள்ளேன் என்று கூறினாலும், அவர்களுக்கான தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.

போரால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட படையினருக்க கடந்த அரசாலும், தற்போதைய அரசாலும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் எதுவித அறிவிப்புகளும் கடந்த அரசைப்போலவே இந்த அரசாலும் விடுக்கப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை அந்தந்த மாகாணசபைகளை முன்னெடுப்பதற்கு ஏற்றவாறு மாகாணசபைகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. அங்கவீனமாக்கப்பட்டவர்கள், விசேட தேவைக்குட்பட்டோர் ஆகியோரின் குடும்பங்களுக்கும் இராணுவத்தினருக்கும் இணையான வசதிகளும், கொடுப்பனவுகளும் வழங்கப்படவேண்டும். இதேவேளை, சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு வழக்குப் பதிவுசெய்ய முடியாமல் பல ஆண்டுகாலம் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைப் போக்குகின்ற வகையில் உரிய நட்டஈடு வழங்கப்படவேண்டும்.

நல்லாட்சிக்கு அடையாளமாகவும், நல்லிணக்கத்துக்கான குறியீடாகவும் அனைத்து அரசியல் கைதிகளும் அரசியல் ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்படவேண்டும். 62 பேரை பிணை அடிப்படையில் விடுவிப்பதாகக் கூறப்பட்டிருந்தாலும், வெறுமனே 39 பேரை மட்டுமே விடுவித்துள்ளார்கள்.அவர்களில் 6 பேர் சிங்களவர்களாக காணப்படுகின்றனர். ஏனையோரை விடுதலைசெய்வது குறிதது அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

புனர்வாழ்வு தொடர்பாக அரசு விடுத்துள்ள நடவடிக்கைகளால் சிக்கல் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள், அரசியல் காரணங்களுக்காகவே கைதுசெய்யப்பட்டவர்கள் என்பதை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு நிபந்தனையற்ற வகையில் விடுதலையளிப்பதே நல்லெண்ணத்தை விரும்பும் அரசின் நற்சமிக்ஞையாக இருக்கமுடியும். ஆனால், அரசின் உயர்மட்டத்தினர் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கோரிக்கைகளை முன்வைக்கும்போது ஒருவரையொருவர் கையைச் சுட்டிநிற்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசு மீறிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான உரிய பதிலை வழங்கவேண்டுமென இச்சபையிடம் கேட்டுக்கொள்கின்றேன். தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசின் செயற்பாடானது எமக்குப் பாரிய ஐயப்பாடுகளை அரசின் மீது ஏற்படுத்தியுள்ளது. வாக்குறுதிகள் மீறப்பட்ட நிலையில் இவ்வாறான ஐயப்பாடுகள் ஏற்படுவதென்பது யதார்த்தமானது. தென்னிலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் இவ்விடயத்தை சாதகமாக பயன்படுத்திவிட்டார்கள் என எமக்குக் காரணம் கற்பிக்க முயல்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு காணப்படும் பல்வேறு பிரச்சினைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினையொன்றாகும். அதற்கான தீர்வை அளிப்பதற்கே இவ்வாறான தயக்கத்தை காண்பிக்கிறீர்கள் என்றால் அதிகாரப்பரவலாக்கலுடனான அரசியல் தீர்வொன்றைப் பெறுவது குறித்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றீர்கள். அவற்றை எவ்வாறு தென்னிலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் புரிந்துணர்வை ஏற்படுத்தப்போகின்றார்கள்” – என்றார்.

Related Posts