Ad Widget

திக்கம் வடிசாலையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க ஏற்பாடு

கடந்த சில வருடங்களாக இயங்காத நிலையில் இருக்கும் திக்கம் வடிசாலையில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. இவற்றில் சிலவற்றை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்துவைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் திக்கம் வடிசாலையை இயக்கிவரும் வடமராட்சி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணியின் இயக்குநர் சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (20.06.2016) இடம்பெற்றது.

திக்கம் வடிசாலையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போதே வடிசாலையில் நிலவும் பிரச்சினைகள் சிலவற்றை உடனடியாகத்தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

திக்கம் வடிசாலையில் கடந்த காலங்களில் மதுபான உற்பத்தி இடம்பெறாததால், பணியாளர்களுக்கு நீண்டகாலமாக வேதனம் வழங்காத நிலை நீடித்து வருகிறது. பல பணியாளர்கள் வேறு சங்கங்களுக்கு இடம் மாற்றப்பட்டபோதும் வடிசாலையின் பாதுகாப்புக் கடமையில் இருக்கும் ஆறு பணியாளர்களை அவர்களது சேவையின் அவசியம் கருதி இடம்மாற்றம் செய்ய முடியவில்லை. இதனால் வேதனம் இல்லாமலே பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு யூன் மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குக் கொத்தணியில் இடம்பெற்றுள்ள கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் வேதனம் வழங்க வேண்டும் என இக்கலந்துரையாடலில் முடிவாகியுள்ளது.

மேலும், திக்கம் வடிசாலையில் ஒரு இலட்சம் இலீற்றர் வரையான மதுசாரம் கையிருப்பில் உள்ளது. இதனை தென்இலங்கையில் உள்ள மதுபான உற்பத்தியாளர்களுக்கு விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும், இதிலிருந்து பெறப்படும் வருவாயில் ஊழியர்களுக்கான கடந்தகால வேதனக் கொடுப்பனவுகளை வழங்குவதெனவும், திக்கம் வடிசாலை இதுகாலவரை பெற்ற கடன்களை மீளளிப்பது எனவும் முடிவாகியுள்ளது.

திக்கம் வடிசாலைக்கான உரிமத்தை பனை அபிவிருத்திச்சபையே கொண்டுள்ளது. இந்த உரிமத்தை முற்றுமுழுதாக வடமராட்சி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணியிடம் கையளிக்க வேண்டும் என்று கொத்தணியும் வடக்கு மாகாணசபையும் கோரி வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசாங்கம் இன்னமும் முடிவெடுக்காததால், திக்கம் வடிசாலையின் செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு வருட காலத்துக்குக் கொத்தணியிடம் உரிமத்தைக் கையளிக்கும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்குப் பனை அபிவிருத்திச் சபையிடம் கோருவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திக்கம் வடிசாலை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு தற்போதுள்ள இயக்குநர் சபையுடன் மேலதிகமான உறுப்பினர்களை நியமிக்குமாறு, கொத்தணியின் பொதுச்சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிக் கூட்டுறவு ஆணையாளருக்கு அனுப்பி வைத்திருந்தது. இதன் அடிப்படையில் யாழ் மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் செ.சரவணபவா இயக்குநர் சபையின் தலைவராகவும், வடமாகாண பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் முன்னாள் தலைவர் பு.குணரத்தினம் உறுப்பினராகவும் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் வே.சிவயோகன் கூட்டுறவு அபிவருத்தி உதவி ஆணையாளர் பொ.மோகன் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

thikkam-news (1)

thikkam-news (2)

thikkam-news (3)

thikkam-news (4)

Related Posts