Ad Widget

தாவடியில் கைதாகிய ஆவா குழு உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கிய நபர் என்று கூறப்பட்டவரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

சந்தேகநபர் மீது இருவேறு வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் பொலிஸாரும் கோப்பாய் பொலிஸாரும் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

கொக்குவில் முதலி கோவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் என யாழ்ப்பாணம் பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.

சந்தேகநபருக்கு நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புள்ளது என்று கோப்பாய் பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

“இருவேறு சம்பவங்களுடனும் சந்தேகநபருக்கு தொடர்புடையவர் என்று எவ்வாறு குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள்?” என மன்று பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பொலிஸார் உரியவாறு பதிலளிக்கத் தவறியதால், சந்தேநபரை ஆள் பிணையில் விடுவிக்குமாறு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

நீ்ர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்து கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 23 வயது இளைஞன், திங்கட்கிழமை தாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் சிறப்பு பொலிஸ் குழுவினர் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

சந்தேகநபரிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நேற்று (22) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போதே பிணை வழங்கி நீதிமன்று உத்தரவிட்டது.

Related Posts