கடந்த சில தினங்களாக அராபியக்கடல் பகுதியில் தோன்றியிருந்த தாழமுக்க வலயமானது படிப்படியாக வலுவடைந்து, தற்போது அயனமண்டல (Tropical Storm) சூறாவளியாக உருவெடுத்துள்ளது. இதற்கு சபாலா (Chapala) என பெயரிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை (2015.10.30) செய்யப்பட்ட அவதானிப்பின் போது, இந்த சபாலா சூறாவளியானது மணித்தியாலத்திற்கு 07 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தற்போது இந்திய மும்பை நகரிலிருந்து மேற்கு-தென்மேற்காக 1240 கிலோமீற்றர் தூரத்திலும் ஓமான் நாட்டின் சலலா (Salalah) பிராந்தியத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 930 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது.
இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, மிகவும் வலுவான சூறாவளியாக (Very Severe Cyclonic Storm) உருவெடுத்து. வட ஜெமென் (Yemen) நாட்டிற்கும் ஓமான் நாட்டிற்கும் இடையே எதிர்வரும் நொவெம்பர் 02 ம் திகதி ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூறாவளிக் காற்றின் வேகமானது மணிக்கு 115 கிலோமீற்றர் முதல் 135 கிலோமீற்றர் வரை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேச வளிமண்டல அமுக்கமானது 988 ஹெக்கர் பஸ்கல் (988 Hpa) ஆக காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்
