Ad Widget

தாக்குதல் தொடர்பாக மஹிந்தவினால் முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை – சுமந்திரன்

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த செய்தியினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகவும் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) காலை கூடியது. இதன்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பி, அதற்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏப்ரல் 21, 2019 அன்று பல தற்கொலை குண்டுதாரிகளால் இழைக்கப்பட்ட பேரழிவின் துயர் சம்பவங்களை நாம் அனைவரும் அறிவோம். வரவிருந்த தாக்குதல் பற்றி புலனாய்விலிருந்து தகவல் பெறப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.சில அரசியல்வாதிகள் இதை அறிந்திருந்தும் ஏனையோரை எச்சரிக்காது போனது பற்றி குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆங்கில பத்திரிகையின் முதற் பக்கத்தில் 1 மே 2019 அன்று “Political gossip” பிரிவில், நான் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு ஈஸ்டர் தினத்தன்று செல்லவிருந்ததாகவும், அத்தேவாலயம் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாக கூடும் என தனக்கு புலனாய்வு தகவல் இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்னை எச்சரித்த காரணத்தினால் நான் அங்கு செல்லாமல் விட்டதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இது ஒரு அப்பட்டமான பொய். இது நாடாளுமன்ற உணவகத்தில் எனக்கும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமிடையே இடம்பெற்ற உரையாடல் ஒன்றை மேற்கோள் காட்டி அமைக்கப்பட்டது.

இவ்வாறன பதிவுகள் இன்றைய சூழ்நிலையில் ஆபத்தானதும் ஆகும். நான் இதை கண்டதும், இது உண்மையில்லை. நான் வழமை போல கொழும்பில் ஈஸ்டர் வழிபாட்டுக்கு சென்றிருந்தேன் என்றும், ஈஸ்டர் தினத்திற்கு மட்டக்களப்பிற்கு செல்வதாக நான் திட்டமிட்டிருக்கவில்லை என்றும், மேலும் குண்டுவெடிப்புக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எனக்கு இவ்வாறன எந்த எச்சரிக்கையும் வழங்கியிருக்கவில்லை என்றும் பகிரங்கமாக தெரிவித்தேன்.

அடுத்தநாள், அதாவது 2 மே 2019 அன்று பத்திரிக்கையானது இன்னோர் “Political gossip”ஐ ‘தெளிவுபடுத்துதல்’ எனும் பெயரில் பிரசுரித்திருந்தது. அதில், உண்மையில் எதிர்க் கட்சித் தலைவர் திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019 அன்று ஒரு “ கும்பல் தாக்குதல்” குறித்து என்னை எச்சரித்திருந்ததாகவும் முன்னய தின கிசுகிசுவில் இது பற்றியே கூறப்பட்டிருந்ததாகவும் கூறி, இத் “தவறான மொழிப்பெயர்ப்பு” க்கு மனம்வருந்தி பிரசிக்கப்பட்டிருந்தது.

இதுவும் பொய்யானது. ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவர் எனக்கு எந்த கும்பல் தாக்குதல் பற்றியோ அல்லது எதிர்ப்பு பற்றியோ ஒருபோதும் கூறியிருக்கவில்லை.” என கூறினார்.

Related Posts