Ad Widget

‘தாக்கியவர்களை கைதுசெய்யும்வரை கடமைக்குச் செல்லமாட்டோம்’ : கிராம அலுவலர்கள்

தென்மராட்சி பிரதேச கிராம அலுவலர்கள், நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தமது பிரிவுக்குக் கடமைக்குச் செல்வதில்லை என தெரிவித்துள்ளனர்.

அல்லாரை கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர்கள், புதுவருட தினத்தில் இருந்து 3 நாட்களாக, ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலித்ததுடன், இரவு- பகலாக தாமும் பாடி அயலவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியுள்ளனர். இதுதொடர்பில் அல்லாரைப் பகுதி மக்கள், கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளனர்.

அப்பகுதிக்கு விரைந்த கிராம அலுவலரான மோ.பிரகாஸ், வீட்டு உரிமையாளரைச் சந்தித்து அயலவர்களின் முறைப்பாட்டினை தெரிவித்துள்ளார். அதனையடுத்து வீட்டு உரிமையாளர், ஒலிபெருக்கியை நிறுத்தியுள்ளார்.

போதையுடன் பாடலைக் கேட்டு ஆடிக் கொண்டிருந்த அங்கிருந்த மூவர், பாடலை நிறுத்தக் காரணமாக இருந்த கிராம அலுவலரைத் தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த அலைபேசியை பறித்து உடைத்துள்ளனர்.

இதனையடுத்து கிராம அலுவலர், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் அங்கு சென்றபோது வீட்டு உரிமையாளரும் கிளிநொச்சி மற்றும் கச்சாய் பகுதிகளைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படும், கிராம சேவையாளரைத் தாக்கிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர்.

சந்தேக நபர்கள் புதன்கிழமை (19) வரை கைது செய்யப்படாத நிலையில், சாவகச்சேரி பிரதேச செயலக ஊழியர்களால் புதன்கிழமை (19) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கிராம அலுவலர் நேரத்தில் தாக்கப்பட்டு நான்கு நாட்களாகியும் தாக்கியவர்களைக் கைது செய்யப்படாமையை கண்டித்து கடமைக்கு செல்லாதிருக்க தென்மராட்சி பிரதேச கிராம அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர்.

“எமது தீர்மானத்தை, பிரதேச செயலாளர் ஊடாக, யாழ். மாவட்ட செயலாளருக்கு மகஜர் மூலம் அறிவித்துள்ளோம். கிராம அலுவலரைத் தாக்கியவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தும் வரை எமது பாதுகாப்பு கருதி பிரிவுக்குக் கடமைக்குச் செல்லாமல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றவுள்ளோம்” என, அவர்கள் மேலும் கூறினர்.

Related Posts