Ad Widget

தவறாக வௌியிட்ட செய்தியை திருத்தவும்; AFP செய்திச் சேவைக்கு கோட்டாபய கடிதம்

தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

இதன்காரணமாக குறித்த செய்தியை திருத்தி பிரசுரிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது சட்டத்தரணியூடாக பிரான்ஸ் செய்திச் சேவைக்கு (AFP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தன்மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக சரத் பொன்சேகாவிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தும் போது எந்தவொரு இடத்திலும் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை என்று கோட்டாபாய ராஜபக்‌ஷவின் சட்டத்தரணி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கும் போது தனது பெயரை பயன்படுத்தி உண்மையற்ற செய்தி வௌியிடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா என்பவர் இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட நபர் என்றும், 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவால் தோற்கடிக்கப்பட்டவர் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டிருப்பது இராணுவத்தின் விஷேட படைப்பிரிவு ஒன்றினாலேயே என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும், அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவின் அனுமதி அல்லது கட்டளையின் படியே இது நடந்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ சார்பாக அவரின் சட்டத்தரணி சனத் விஜேவர்தன இந்தக் கடிதத்தை பிரான்ஸ் செய்திச் சேவைக்கு (AFP) அனுப்பி வைத்துள்ளார்.

Related Posts