Ad Widget

தவராசாவுக்கு கூட்டமைப்பு அழைப்பு

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவை ஆளுங்கட்சியின் பக்கம் வந்து அமரும்படியும் தங்களின் சில உறுப்பினர்களை எதிர்க்கட்சியின் பக்கமும் அமருவதற்கும் அனுமதிப்பதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார்.

CVK-Sivaganam

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களின் ஒழுங்குகள், சபையில் நடந்துகொள்ளும் முறைகள் தொடர்பில் அவைத்தலைவர் விளக்கமளித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

‘அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் ஒழுங்கற்ற முறையில் வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அமர்ந்து கொண்டமை கவலையளிக்கின்றது.

மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் வடமாகாண சபையினர் அமரக்கூடாது. அவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் மட்டும் அமரவேண்டும்.

வடமாகாண சபையில் உறுப்பினர்கள் அமர்ந்துகொள்ளும் முறைகளில், உறுப்பினர்களின் அனுமதியுடன் மாற்றங்கள் செய்துள்ளதாக கூறினார். எதிர்க்கட்சி வரிசையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை அமரவைத்துள்ளேன்’ என்றார்.

இதன்போது குறுக்கிட்ட தவராசா, இது தொடர்பில் ஆட்சேபனையில்லை, உங்கள் பக்கமுள்ளவர்களின் மேலும் சிலரையும் எங்கள் பக்கம் அனுப்புங்கள் என்றார்.

அதற்குப் பதிலளித்த அவைத்தலைவர், உங்கள் பக்கம் இருக்கும் நால்வரை ஆளுங்கட்சியினர் பக்கம் அமர்வதற்கு அனுப்புங்கள், நாங்களும் இரண்டு, மூன்று பேரை உங்கள் பக்கம் அனுப்புகின்றோம் என சிரித்துக்கொண்டே கூறினார்.

Related Posts