நாவற்குழி கிழக்கு கோவிலாக் கண்டி பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு 7மாதம் 19ஆம் திகதி எமது பகுதியில் 5 கிலோ மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பலரை அழைத்துச் சென்றனர். பிரதேச சபையில் 4 தலையாட்டிகளை நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது ஆண்களை ஒரு வரிசையாகவும், பெண்களை ஒரு வரிசையாகவும் நிற்க வைத்து தலையாட்டியை வைத்து அடையாளப்படுத்தினர்.
எனக்கு முன் நின்ற மகனை தலையாட்டி முன் கொண்டு சென்ற போது முதலாவது தலையாட்டியும் 2வது தலையாட்டியும் 3ஆவது தலையாட்டியும் எனது மகனை கண்டு தலையாட்டவில்லை.4ஆவது தலையாட்டியும் தலையை அசைக்காமல் நின்ற போது அவரின் பின்னால் நின்ற இராணுவ வீரர் ஒருவர் அவருடைய காலில் தடியால் குத்திய போது அவர் வலியில் தனது தலையை ஆட்டினார்.உடனே எனது மகனை பிடித்து சென்று விட்டார்கள். நான் சம்பவத்தை கூறி அவர் தலையாட்டவில்லை. எனது மகனை விடுதலை செய்யும் படி கேட்டேன். அவர்கள் அதை கேட்பதாய் இல்லை.
அப்போது நாவற்குழி படைமுகாமின் இராணுவ அதிகாரி துமிந்த கப்பற்றி வெலான மற்றும் 2ஆம் நிலை அதிகாரி சுனேல் ஆகியோர் பணிபுரிந்தனர். அவர்களிடம் எனது மகனை விடுதலை செய்யும் படி கடிதம் கொடுத்திருந்தேன். பின்னர் எனது மகனை வாகனத்தில் ஏற்றி சென்று இராணுவ முகாமிற்கு கூட்டி சென்றார்கள். அங்கு போய் கேட்டபோதும் அவரை விடவில்லை.
இதுவரைக்கும் அவரைப் பற்றி தகவல் எமக்கு கிடைக்கவில்லை என யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது தந்தையொருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார்.