தலைமன்னாரில் ராமர் பாலம் மணல் திட்டுகளுக்கு சுற்றுலாப் படகுச் சேவை!!

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை மக்கள் மற்றும் சுற்றுலாவிகள் நேரில் சென்று பார்வையிடும் வகையில் சுற்றுலா படகுச் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரீட்சார்த்தப் படகுப் பயணம் இன்று (25.09.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன், எதிர்வரும் 28.09.2026 திங்கட்கிழமை முதல் சுற்றுலாவிகளுக்கான படகுச் சேவையை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இச்சுற்றுலா நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இப்புதிய படகுச் சேவையின் பரீட்சார்த்தப் பயணம் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் மற்றும் மன்னார் நகரப் பிரதேச செயலாளர் ஆகியோர் உள்ளிட்ட பலர் இப்பரீட்சார்த்தப் பயணத்தில் பங்கேற்றனர்.

இதன்போது, தலைமன்னாரிலிருந்து படகில் பயணம் மேற்கொண்ட குழுவினர் மூன்றாவது மணல் திட்டைச் சென்றடைந்து, அங்கு இறங்கி அந்தப் பகுதியை நேரில் பார்வையிட்டனர். மணல் திட்டுகளின் அமைவிடம், அங்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அடிப்படை ஏற்பாடுகள் தொடர்பிலும் அவதானிக்கப்பட்டது.

பின்னர் தலைமன்னாருக்குத் திரும்பிய குழுவினர், சுற்றுலாப் படகுச் சேவையை ஆரம்பிப்பதற்கான இடத்தைத் தெரிவு செய்வது தொடர்பில் காணப்பட்ட சிக்கல்கள் குறித்து ஆராய்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள், வனஉயிரிகள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் மூலம் சுற்றுலா படகுகள் புறப்படுவதற்கும், மீண்டும் வந்து தரித்து நிற்பதற்குமான பொருத்தமான இடம் அடையாளம் காணப்பட்டது.

இதற்கமைய, உரிய ஏற்பாடுகளை முன்னெடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தலைமன்னாரிலிருந்து மணல் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான சுற்றுலா படகுச் சேவையை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமர் பாலத்துடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படும் இம்மணல் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படுவதன் மூலம், மன்னார் மாவட்டத்தின் கடல்சார் சுற்றுலா வளங்களை மேலும் அறிமுகப்படுத்துவதுடன், உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில் மற்றும் வருமான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் இது பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts