Ad Widget

தற்போதைய வடிவத்தில் ’20’ சபைக்கு வருமானால் கூட்டமைப்பு எதிர்க்கும்!

“அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தின் தற்போதைய வடிவம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை எதிர்த்து வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் எடுத்துரைக்கவும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றபோது மேற்படி முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்ட வடிவம் அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் திருத்தச் சட்டத்தில் தேர்தல் முறைமை மறுசீரமைப்பில், தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த சிறுபான்மையினர் – சிறு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த 20 ஆவது திருத்தச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடபட்டது.

இதன்போது, தற்போதைய வடிவத்தில் 20 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை எதிர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கூறினார்.

தற்போதைய வடிவத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறுபான்மையினருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டாலே அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடம் நேரில் எடுத்துரைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Related Posts