Ad Widget

தற்கொலை அங்கியுடன் தொடர்புடையவர் இந்தியாவுக்கு தப்பிவிட்டாராம்!

சாவகச்சேரியில் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச்சென்றிருக்கலாம் என குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்ட சிவகரன் இந்தச் சந்தேக நபர்கள் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட சிவகரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ஓர் ஆண்டுக்கு நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சிவகரனை அரசதரப்பு சாட்சியாக முன்னிறுத்துவது தொடர்பில் அரசாங்கமே முடிவெடுக்கவேண்டுமெனவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வெடிபொருட்கள் தொடர்பிலேயே விடுதலைப்புலிகளின் தளபதிகளான ராம், நகுலன், கலையரசன் போன்றோரும் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Related Posts