Ad Widget

தரம் 1 மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆக மட்டுப்படுத்துவது அநீதி!

அரச பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பொன்றுக்கு 35ஆக மட்டுப்படுத்தியிருப்பது நியாயமற்றது எனவும், அதன் மூலம் ஏராளமான மாணவர்கள் அனுமதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த காலங்களில் ஏராளமான ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டதால் எஞ்சியுள்ள அரச பாடசாலைகளில் அனுமதி கோரும் மாணவர்கள் இந்த 35 மாணவர்கள் கட்டுப்பாட்டால் தமது வாய்ப்புகளை இழக்க நேரிடுவதாக அச்சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருக்கிறார்.

வகுப்பொன்றுக்கு அனுமதிக்கப்படக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக எல்லைப்படுத்திய அரசு, மூடப்பட்ட ஆரம்பப் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், எனவே அடுத்த வருடம் ஏராளமான மாணவர்கள் அனுமதி கிடைக்காமல் திண்டாடப் போகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மூடப்பட்டுள்ள ஆரம்பப் பாடசாலைகளை மீண்டும் திறந்து அவற்றுக்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியுமென தமது சங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts