Ad Widget

தயா மாஸ்டர் போட்டியிடுவதை த.தே.கூ. விரும்பவில்லை

thaya-masterவடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் தயா மாஸ்டர் போட்டியிடுவதை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,

“வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் போராளிகளை களத்தில் இறக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தேர்தலில் தயா மாஸ்டர் மற்றும் தமிழினி ஆகியோரின் வெற்றி வாய்ப்புக்கள் நூற்றுக்கு பூச்சியமாக அமையும்.

மக்களுக்காக போராடியவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். ஆனால், மக்களுக்காக இவர்களை எதனை சாதித்தார்கள்? என்று கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

கடந்த முறை எதிர்கட்சித் தலைவர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது தயா மாஸ்டரைச் சந்திக்க விரும்பினார். அவரைத் தொடர்புகொண்டு நான் இந்த விருப்பம் தொடர்பில் தெரிவித்தேன்.

இருப்பினும், ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க அவர் விரும்பவில்லை. ஆனால், வரணிப் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என அறிந்தேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இவரைப் போட்டியிட வைக்க வேண்டும் என்று நான் தெரிவித்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இவரை போட்டியிட வைப்பதை விரும்பவில்லை.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியாமல் அவர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டது. இவ்வாறு வாக்குரிமை மறுக்கப்பட்டதன் காரணமாகவே தமிழ் மக்கள் இன்று பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

Related Posts