Ad Widget

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு இன்று (06) செவ்வாயன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இரண்டாவது தடவையாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு கொள்ளப்பட்டபோது,

இந்த நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான அனைத்து வழக்குகளினதும் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அவருடைய பணிப்புரைக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்தக் கோவைகள் இன்னும் அங்கிருந்து திரும்பி வராத காரணத்தினால் இந்த வழக்கை வேறு ஒரு திகதிக்கு ஒத்தி வைக்குமாறு அரச சட்டத்தரணி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது, சாதாரண மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தமை தொடர்பில், கொழும்பு நீதவான் முன்னிலையில் தயா மாஸ்டரால் வழங்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தயா மாஸ்டர் சார்பில் முன்னிலையாவதற்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

Related Posts