Ad Widget

தம்பிராசா மூன்றாவது தடவையாகவும் உண்ணாவிரதம்

அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மூன்றாவது தடவையாகவும் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதித்துள்ளார்.

thambirajah

கடந்த வருடம் இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்திருந்த அவர் எவ்விதமான உத்தரவாதங்களும் வழங்கப்படாத நிலையில் தனது உண்ணாவிரத போராட்டத்தை குறுகிய நாட்களுக்குள் நிறைவுக்கு கொண்டுவந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 11 ஆம் திகதி ஆரம்பித்த முதலாவது உண்ணாவிரதப்போராட்டத்தை அவர் இரண்டுநாட்களில் நிறைவு செய்துகொண்டார்.

இதேவேளை, வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றமை எதிர்ப்பு தெரிவித்து ஒக்டோபர் மாதம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை நான்கு நாட்களில் நிறைவு செய்து கொண்டார்.

இந்நிலையிலேயே, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த வலியுறுத்தியும் இடம்பெயர்ந்த மக்களுக்கு இடைநிறுத்தப்பட்ட நிவாரணத்தை வழங்கக் கோரியும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஐர் ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்புவதற்காக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்துள்ளார்.

அந்த மகஜரில்…

எமது நாட்டில் இடம்பெயர்ந்து அகதிகளாக அகதி முகாம்களில், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வலிகாமம் வடக்கு மற்றும் சம்பூர் மக்களுக்கு நிறுத்தப்பட்ட இடம்பெயர்ந்தோருக்கான உலர் உணவு நிவாரணம் வழங்குவதினை ஆவண செய்ய வேண்டும்.

காணாமல் போன நமது மக்கள் சம்பந்தமாக நமது நாட்டு மக்களின் ஏகோபித்த தலைவர் என்ற வகையில் பரிதவிக்கும் மக்களுக்கு உண்மையுடனும், உறுதியான செயற்பாட்டின் மூலமாகவும் நீதியான முடிவுகளை விரைவான நடவடிக்கை மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

விடுதலை செய்யப்பட்டு இன்றும் வேலையற்று இருக்கும் அரசியல் கைதிகளை நமது நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் பங்காளிகளாக்க வேலை வாய்ப்புக்களை உருவாக்கி கல்வியறிவு, தராதரத்தைப் புறந்தள்ளி அனுபவ அறிவைக் கணக்கிலெடுத்து அவர்களது வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து வைத்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமக்காக போராட்டம் செய்ய இன்று யார் இருக்கின்றார்கள். முன்னர் எமக்காக போராடிய தியாகி திலிபனும் இறந்து விட்டார். நாமே நமக்காகப் போராட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்த மக்களிற்கான நிவாரணப் பொருட்களில் 5உம் அதற்கு மேற்பட்ட பேர் கொண்ட குடும்பங்களுக்கு 1260 ரூபா பெறுமதியான பொருட்களும், 4 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 1050 ரூபா பெறுமதியான பொருட்களும், 3 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 720 ரூபா பெறுமதியான பொருட்களும், 2 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 315 பெறுமதியான பொருட்களும், ஒரு நபருக்கு 168 ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கப்பட்டு வந்தன.

இருந்தும், இடம்பெயர்ந்த மக்களிற்கு 6 மாதகாலங்களிற்கு மட்டுமே நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கான நிவாரணங்கள் 2010 ஆம் தொடக்கம் 2011 ஆண்டு கால்பபகுதியில் படிப்படியாக நிறுத்தப்பட்டன.

இதனால், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக சம்பூர் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 869 குடும்பங்களும், யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள 6500 குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றார்.

தொடர்புடைய செய்தி

நிவாரணங்களை மீள வழங்குமாறு கோரி தம்பிராசா உண்ணாவிரதத்திற்கு முஸ்தீபு

Related Posts