Ad Widget

தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வையே நாம் ஏற்போம்! – திருமலை கௌரவிப்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதி

நல்லாட்சிக்கு அத்திவாரம் நிரந்தர சமாதானம். இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களும் விரும்புகின்றார்கள். எமது மக்களை நாம் கைவிடமாட்டோம். எமது மக்கள் விரும்புகின்ற தீர்வையே நாம் ஏற்றுக்கொள்வோம். – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

sampanthan

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற அந்தஸ்து. அந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களே முக்கிய காரணம். இம்மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து 16 உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியமையினால் நாடாளுமன்ற சம்பிரதாயப்படி இப்பதவி எமக்கு வழங்கப்பட்டுள்ளது – என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் திருகோணமலை மக்களால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-

மழையையும் பொருட்படுத்தாது என்னைக் கௌரவிக்கவேண்டும் என்று வந்த அனைவருக்கும் நன்றிகள். இந்தக் கௌரவிப்பை நான் மிகவும் பணிவுடனும், அடக்கத்துடனும் இதனை ஏற்றுக்கொள்கின்றேன். இந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது.

அதன் பின் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட வேண்டும், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும், சட்டம் சமனாக இருக்கவேண்டும், நாடாளுமன்றத்தின் கௌரவம், – ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், உயர் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும், பொலிஸ் சேவை – மனித உரிமை விடயங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும்.

இவை எல்லாம் நல்லாட்சியின் அம்சங்கள். கடந்த 9 ஆண்டுகள் குறைபாடுகளுடன்தான் ஆட்சி காணப்பட்டது. நல்லாட்சியில் இருந்து அரசு விலகியது. இந்த நாட்டில் சமத்துவம் இருக்கவில்லை. சமத்துவத்தை ஏற்படுத்தாதனால் எமது தமிழ் இளைஞர்கள் 30 வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அப் போராட்டத்தை சாதாரண விடயமாகப் பார்க்கமுடியாது.

அவர்களின் தியாகங்கள் அளப்பரியவை. ஆனால், நல்லாட்சியில் இருந்து கடந்த அரசு விலகியிருந்தது. நாட்டில் கடந்த ஆட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்கி இருந்தது. சுருக்கமாகக் கூறுவதானால் நாடு குழப்பமான சூழலில் இருந்தது. இன்று எமது பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. எமது தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். நல்லாட்சிக்கு எதிர்க்கட்சியில் இருந்து ஆற்ற வேண்டிய விடயங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

அதேவேளை, எமது தேசியப் பிரச்சினைக்கு தீர்வு பெறுவதில் இருந்து ஒருபோதும் நாம் தவறமாட்டோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமக்குரிய தீர்வு பற்றி குறிப்பிட்டிருக்கின்றோம். நாட்டைப் பிரிக்கும்படி நாம் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் சுய ஆட்சியுடன் இறைமை பகிர்ந்தளிக்கக்கூடிய தீர்வையே கேட்டு நிற்கின்றோம் – என்றார்.

Related Posts