Ad Widget

தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும். ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் திங்கட்கிழமை (21) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், நாடாளுமன்றம் ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சபையாக எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மாற்றப்படவுள்ள சூழ்நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை உருவாக்க வேண்டிய கடமை தமிழ்த் தலைமைகளிடம் காணப்படுகின்றது.

இத்தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்கள் மத்தியில் வைத்து சரியானாதா அல்லது பிழையானதா என்று ஆராயவேண்டும். அதனைவிடுத்து, கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல் ஒன்று அல்லது இரண்டு பேர் தாங்கள் விரும்பியவாறு அரசாங்கத்துடன் பேசுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் தலைவிதி ஒரிருவரின் கைகளில் இல்லை. இதனை சம்பந்தன் சரியாக கையாண்டிருந்தால் தமிழ் மக்கள் பேரவை உருவாகவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.

மேலும்,இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமானது, பொதுமக்கள், புத்திஜீவிகள் மற்றும் ஆலோசகர்களின் கருத்துக்கமைய உருவாக்கப்பட்டு, அதனை முன்வைப்போம். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவும் முன்வைக்கப்படலாம். அதனையே தமிழ் மக்கள் பேரவை செய்கின்றது.

நல்ல விடயங்கள் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்படவேண்டும். இந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல. கூட்டமைப்புக்கு எதிரானது என்ற தோற்றப்பாட்டையும் கொடுப்பது அர்த்தமற்ற செயற்பாடு ஆகும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம் மாத்திரமின்றி, தற்போது இளைஞர்கள் மத்தியில் பரவும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழித்தல், கல்வியில் பின்தங்கியிருக்கும் வட மாகாணத்தை முன்னேற்றுதல், சுகாதாரத்தை மேம்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் இந்த அமைப்பால் மேற்கொள்ளப்படும்.

அமைப்பின் மீது சாயம் பூசுதல் அல்லது தேவையான வியாக்கியானங்களை கூறுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts