Ad Widget

தமிழ் மக்களுடைய சகல பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினைக் காண்போம்!- யாழில் சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்றய தினம் யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுகளில் அவர் உரையாற்றுகையில்,

சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி தீர்வினை காணுங்கள் என கூறுகின்றார்கள். எனவே அந்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள், தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், எம்மை ஆதரிக்கிறார்கள் என்ற செய்தி தேர்தல் ஊடாக வெளியாகவேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மானிப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையில் ஆட்சிமாற்றத்திற்கு முன்னர் தமிழர்களை துன்புறுத்தி இந்த நாட்டைவிட்டு வெளியேற்றவே மஹிந்த முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையிலேயே ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஆட்சிமாற்றத்தின் பின்னரும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் தொடர்பான சிக்கல்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களினதும், கைவிடப்பட்ட சிறுவர்கள், முதியவர்களுடைய நலன்களும் கவனிக்கப்பட முடியவில்லை.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னரும் தை மாதம் மக்கள் ஆணை வழங்கிய ஆட்சியே உருவாகும். அந்த ஆட்சியுடன் பேசுவோம் தமிழ் மக்களுடைய மேற்படி சிக்கல்கள் தொடர்பாக, நாங்கள் நிச்சயமாக தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம்.

எங்களுடைய கணிப்பின்படி நடைபெறவுள்ள இந்த தேர்தல் அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களிலும் பார்க்க இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில் சுதந்திரமடைந்து சில வருடங்களில், தந்தை செல்வநாயகம் தமிழரசு கட்சியை உருவாக்கினார். அன்று தொடக்கம் நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றன. ஆனால் எங்களுடைய பிரச்சினைகளுக்கு நாங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு தீர்வு இன்றளவும் கிடைக்கவில்லை.

ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அந்த தீர்வு நிச்சயமாக கிடைக்கும். என நாங்கள் நம்புகிறோம்.

இந்தவகையிலேயே இந்த தேர்தலை நாங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கிறோம். இது தொடர்பாக நாங்கள் பேசும்போது பல கோணங்களிலிருந்து நாங்கள் பார்க்கலாம்.

ஆனாலும் தொடக்கத்தில் எமது நிலைப்பாட்டிலிருந்தே தேர்தலை பார்க்க நான் விரும்புகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் தங்கள் ஜனநாயக ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்கியிருக்கின்றார்கள்.

நாங்களும் தொடக்க காலம் தொடக்கம் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்து கொண்டிருக்கிறோம். மக்களும் இருந்திருக்கிறார்கள். அதில் சந்தேகம் கிடையாது. இந்நிலையில் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

அரசாங்கமாக இருந்தாலும், சர்வதேசமாக இருந்தாலும் எங்களோடு பேசுகிறார்கள். சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு கூறுகின்றது எந்த விடயமானாலும், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி தீர்வினை காணுங்கள் என கூறுகின்றார்கள். எனவே அந்த நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என்றே நாங்கள் கேட்கிறோம்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், எம்மை ஆதரிக்கிறார்கள் என்றே என்ற செய்தி தேர்தல் ஊடாக வெளியாகவேண்டும்.

நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பில் எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம். அதாவது பகிரப்பட்ட இறைமை அடிப்படையில் சமஷ்டி முறையலான தீர்வு வழங்கப்படவேண்டும்.

நாங்கள் எங்களுடைய நாளாந்த விடயங்களை பார்த்துக் கொள்வதற்கும், காணி, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற விடயங்களில் எமக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். எங்களுடைய கருமங்களை நாங்களே ஆற்றுவதற்கு வரி, கடன், நன்கொடை ஊடாக நிதியை திரட்டுவதற்கு எமக்கு அதிகாரங்கள் வேண்டும். நாடு பிளவுபடாத வகையில் பூரண சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீரவு உருவாக்கப்படவேண்டும்.

நாங்கள் மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் விடயம், பெற்றோரை இழந்த சிறார்கள் கைவிடப்பட்ட முதியவர்கள் போன்ற உடனடி விடயங்களுக்கு எமக்கு தீர்வு வேண்டும். மஹிந்த இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு ஒருபோதும் இடமளித்திருக்கவில்லை.

மாறாக தமிழ் மக்களை தொடர்ந்தும் துன்புறுத்தி, தமிழர்கள் இந்தநாட்டை விட்டே வெளியேற்றப்படவேண்டும் என்பதையே அவர் குறியாக கொண்டிருந்தார். இந்த நிலையிலேயே ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை காண முடியவில்லை. அதற்கு காரணம் நாடாளுமன்றில் பிரதமர் ஒரு பலவீனமான ஆட்சியை கொண்டிருந்தமையே, ஆனால் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் கடந்த தை மாதம் ஆணை வழங்கிய அதே ஆட்சி மீண்டும் வரும். அப்போது அந்த ஆட்சியுடன் நாங்கள் பேசி தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்கும், உடனடி பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினைக் காண்போம்.

நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிக தெளிவாகவே கூறியிருக்கின்றோம். மக்கள் இதனை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை முறையாக படிக்கவேண்டும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அங்கீகாரத்தை வழங்கவேண்டும். என்றார்.

Related Posts