Ad Widget

தமிழ் மக்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்த முனைகின்றனர் – சுரேஸ்

SURESHயாழ். மாவட்டத்தின் வளலாய் பகுதி மக்களை அவர்களின் சொந்தக் காணிகளிலிருந்து நடுத் தெருவுக்கு அனுப்பிவிட்டு, வலி. வடக்கு மக்களை கொண்டுவந்து வளலாய் பகுதியில் குடியேற்றுவதன் ஊடாக இந்த இரண்டு தரப்பு தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே அரசாங்கமும் இராணுவமும் முயல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வளலாய் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றக் கோரியும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசித்துவரும் மக்களை வளலாய் பகுதியில் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோப்பாய் பிரதேச செயலகம் முன்பாக நேற்றயதினம் காலை கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதன்போது, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வளலாய் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த பின்னர், இராணுவம் அக்காணிகளை சுவீகரித்ததாக அறிவித்தது. அது சட்டரீதியாக சுவீகரிக்கப்பட்டு விட்டதா? இல்லையா? என்ற நிலையில் தற்போது வளலாயிலுள்ள காணிகள் துப்பரவு செய்யப்பட்டு, அங்கு வலி. வடக்கு மக்களை குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

272 குடும்பங்களை சேர்ந்த 920 பேர் இந்த மண்ணில் மீளக்குடியேற வேண்டியுள்ளது. இந்த 272 குடும்பங்களில் 224 குடும்பங்களுக்கு அந்த மண்ணுக்கு உரித்தான உறுதிகள் இருக்கின்றன. மீதி 48 குடும்பங்களும் அந்த மண்ணுக்கு உரித்தானவர்கள் தான்.

234 ஏக்கர் நிலப்பரப்பு தான் இந்த மக்கள் குடியேற வேண்டும். அவர்களது பொதுநூலகங்கள், கோவில்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கித்தான் இந்த 234 ஏக்கர் காணிகள் இருக்கின்றன.

இந்தக் காணிகளில்தான் இந்த மக்கள் குடியேற முடியாத நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையிலும், அவர்கள் தமது காணிகளில் மீளக் குடியேறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். யுத்தத்திற்கு பிற்பாடு மீளக்குடியேற்றுவோம் என கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை இவர்கள் யாரும் மீளக்குடியேற்றப்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக அவர்கள் வாழ்ந்துவந்த மண்ணுக்கு போனால்தான் அவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க முடியும். அத்துடன், தமது வாழ்வாதாரத்தை அவர்கள் திட்டமிட முடியும். ஆனால், அவற்றுக்கான நிலைமை இங்கு இல்லை. அரசாங்கமும் இராணுவமும் திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்த முயல்கின்றன.

வளலாய் மக்களை அவர்களின் சொந்தக் காணிகளிலிருந்து நடுத்தெருவுக்கு அனுப்பிவிட்டு, வலி. வடக்கு மக்களை கொண்டுவந்து இங்கு குடியேற்றுவதன் ஊடாக இந்த இரண்டு தரப்பு தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே இந்த அரசாங்கமும் இராணுவமும் முயல்கின்றன. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

வலி. வடக்கு மக்கள் அவர்களது சொந்த மண்ணுக்கு போகவேண்டிய மக்கள். ஆகவே அவர்கள் அங்கே போகவேண்டும். அதேபோல, வளலாய் மக்கள் அவர்கள் சொந்தக் காணிகளுக்கு போக வேண்டியவர்கள். எனவே இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீள்குடியேற்றபட வேண்டும். அது மயிலிட்டி, தையிட்டி, பலாலி, காங்கேசன்துறை என எந்த இடங்களாக இருந்தாலும், அந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களிலேயே மீளக்குடியேற்றப்பட வேண்டும். இந்த மக்கள் மீளக்குடியேறும் வரையில் இந்த போராட்டங்கள் தொடரத்தான் செய்யும்’ என்றார்.

Related Posts