Ad Widget

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மூன்று வருடத்திற்குள் தீர்வு: சுவாமிநாதன்

இன்னும் மூன்று வருடத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைத்துவிடுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை நேற்று (புதன்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களாக இருந்து சமூதாயத்திற்கு கடமை செய்ய வேண்டும். மாங்குளத்தில் பொருளாதார வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பொருளாதார வலயத்தினை ஆரம்பித்தால், வடக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து பொருளாதார வயலத்திற்கு வருவதற்கான ஒப்பந்தங்கள் உள்ளன. அவற்றினை நடைமுறைப்படுத்தினால், பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியும்.

இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரும். நீங்கள் அனைவரும் நடேஸ்வராக் கல்லூரி மாணவர்கள் என்ற வகையில், சமூதாயத்தில் நல்லவர்களை வளர்க்க முன்வர வேண்டும்.

வடமாகாண முதலமைச்சரிடமும் பொருளாதார வலயம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. நடேஸ்வரா கல்லூரி 112 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு பாடசாலை.

பாடசாலை மாணவர்களுக்கு குடிநீர் வசதியில்லை என அதிபர் என்னிடம் சொல்லியிருக்கின்றார். அதற்கான தீர்வினை பெற்றுத் தருகின்றேன். பாடசாலைக்கு செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எழுத்துமூலம் தந்தால் வீதியை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

இந்தப்பகுதியில் உள்ள மக்கள் இடம்பெயர்ந்து சென்றதினால், மாணவர்கள் தொகை குறைவாக காணப்படுகின்றது. மீள்குடியேற்றம் செய்யப்பட்டால், மாணவர்களின் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றேன்.” என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related Posts