Ad Widget

தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்கவேண்டியது எனது கடமை!

தென்பகுதி மக்கள் சமஷ்டி ஆட்சிக்கும், வடக்கு மக்கள் ஒற்றையாட்சிக்கும் அச்சப்படுவதாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற இரண்டு சொற்பதங்கள் தொடர்பாக வாதம் நடத்திக்கொண்டிருப்பதை விட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய முறை தொடர்பில் அவதானம் செலுத்துவது அவசியம் என்பதோடு அது அதிகார பரவலாக்கலை விளங்கிக்கொள்வதற்கான வாய்ப்பை எற்படுத்தும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வு தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டுமே தவிர வடக்கிலும் தெற்கிலும் செயற்படும் பிரிவினைவாதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செயற்படமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

காலத்தை வீணடிக்கமுடியாது எனவும் தெரிவித்த அவர், விரைவாக செய்துமுடிக்கக்கூடிய சாத்தியமான தீர்வு தொடர்பாக அவதானம் செலுத்தவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச சமூகம் திருப்தி அடைந்துள்ளதெனவும், சிறீலங்கா தொடர்பாக அவர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணைக்கு சர்வதேச விசாரணையாளர்களை ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த அவர், இதனைச் சர்வதேசமும் புரிந்துகொண்டுள்ளதாகவும், இது தமக்குக் கிடைத்த வெற்றியெனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts