Ad Widget

தமிழ் மக்களின் பலத்தை சிதறடிக்க சதி: சுமந்திரன்

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறித்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ள தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் போலியான வேறுபாடுகளை சந்தைப்படுத்தி, அவர்களின் பலத்தை சிதறடிக்க சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டும் என்கின்ற நோக்கில், கூட்டமைப்பின் அழைப்பை ஏற்ற தமிழ் மக்கள், அதன் தலைமையில் ஒன்றுபட்ட வேளையிலும் கூட, மஹிந்த அரசின் மறைமுக கைக்கூலிகளாக செயற்பட்ட சில சக்திகள், தமிழர்களின் வாக்குரிமையை பயன்படுத்துவதை தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டன’ என்றார்.

‘எனினும், தமது இலக்கு குறித்து தெளிவான வழிகாட்டலைப் பெற்றிருந்த தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்ததன் மூலம் இன்று சுவாசிப்பதற்கான ஒரு திறவைப் பெற்றுள்ளனர். அதே சக்திகள், எதிர்வரும் நாடாளுமன்றம் தேர்தலின் போதும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

எனினும், தமது நோக்கு குறித்து தெளிவான வழிகாட்டலைப் பெற்றுள்ள தமிழ் மக்கள், இவர்களின் சதிகளில் சிக்கி ஏமாறப்போவதில்லை என்பதை, ஒவ்வொரு தேர்தல்களின்போதும் கூட்டமைப்புக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவு எடுத்துக் காட்டுகின்றது’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts