Ad Widget

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க இந்தியா உதவ வேண்டும்

சுயநிர்ணய உரிமையை இழந்து நிற்கின்ற தமிழினத்தின் தலைவிதியை மாற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உன்னதமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை சைவ மகா சபை கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இந்தியப் பிரதமரை வரவேற்கும் கடிதம் கடந்த 6 ஆம் திகதி சைவ மகா சபையின் பிரதிநிதிகளால் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, எமது பூர்வீக நிலத்தில் எமது பண்பாட்டு கோலங்களுக்கு முதன்மை அளிக்கின்ற ஆட்சிமுறையை ஏற்படுத்தி, சரிநகர் சமனாக வாழ்வதற்கு இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு பரிந்துரையும் அழுத்தமும் வழங்க வேண்டும்.

பல்லாயிரம் வருடங்களாக இந்திய திருநாட்டின் தொப்புள் கொடி உறவுகளுடன் விளங்குகின்ற, சிவபூமி என திருமூலர் என்ற இந்திய மெய்ஞானியால் அழைக்கப்பட்ட எமது தாய்த்திருநாட்டில், அதிலும் சிறப்பாக சைவத்தமிழ் இந்துக்களின் கலாசார நகரான யாழ்ப்பாணத்துக்கு இந்திய பிரதமர் ஒருவர் முதன் முதலில் வருவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு உளமார்ந்த நன்றியறிதலையையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓர் நூற்றாண்டுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் எமது மண்ணில் கால்பதித்து ஓர் ஆன்மீக எழுச்சியை உருவாக்கியது போல அவருடைய வழித்தடங்களிலே செல்லும் இந்துப் பண்பாட்டின் நவயுக பாதுகாவலரான தங்கள் வருகையும் ஈழம் வாழ் சைவத்தமிழ் இந்துக்களுடைய வாழ்வின் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

மேலை நாட்டினருடைய காலனித்துவ ஆட்சியின் கீழ் எம்மை நாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமையை இழந்துவிட்ட பூர்வீக சைவத்தமிழ் இந்துக்களாகிய நாம் எமது சகோதர இனத்தவர்களுடன் இழந்துவிட்ட எமது சுயநிர்ணய உரிமைக்காக அரை நூற்றாண்டு காலம் அறவழியிலும் மறவழியிலும் போராடி மிகவும் களைப்படைந்து விட்டோம். இந்த நிலையில் தாழ்வுற்று வறுமைமிஞ்சி இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை எனும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது இனத்தின் தலைவிதியை மாற்றுவதில் தங்களின் உன்னதமான பங்களிப்பை நாடி நிற்கிறோம்.

மேலும், யுத்தத்தினாலும் அதற்குப் பின்னரான நிகழ்வுகளாலும் மிகவும் நலிவுற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சைவத்தமிழ் மக்கள் குழுமமானது மேலைநாட்டு மதக்குழுமங்களின் திட்டமிட்ட பணபலத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மதமாற்றத்தால் எமது பூர்வீக சைவத்தமிழ் இந்து பண்பாட்டுக் கோலங்களை படிப்படியாக இழந்து வருகிறது.

இந்த அவலநிலையை நீக்குவதற்கு அங்கவீனர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், அகதிகள் ஆகியோரை அதிகளவில் கொண்டிருக்கின்ற வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் உயர்கல்வி, தொழில்வாய்ப்பு, கலாசார விருத்தி, வீட்டுவசதி உள்ளிட்ட பாரியளவிலான நலத்திட்டங்களை தங்கள் வருகையின் போது அறிவிக்க வேண்டும் என வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

கடந்த காலத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டோருக்கு நன்மையளித்திருப்பதை இத்தருணத்தில் நன்றியறிதலோடு நினைவு கூர்வதோடு அதே தேவை இன்னும் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

புதிய ஆட்சிமாற்றம் நடைபெற்று மாற்றங்கள் பற்றி பேசப்படுகின்ற இலங்கைத்தீவில் யுத்தத்தின் நேரடி சாட்சியங்களான கைதிகள், காணமற்போனோர், அகதிகள் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாமையானது வேதனை தரும் தொடர்கதையாக இருக்கின்றது.

தாங்கள் வருகையின் போது இவர்களின் வாழ்வில் புது நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட்டு காணாமற்போனோரின் பிரச்சினை தீர்க்கப்பட்டு அகதிகள் யாவரும் தங்கள் சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்படுவார்களேயானால் காயம்பட்ட மனங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதாக அமையும்.

அது மட்டுமின்றி பரஸ்பர நம்பிக்கையுடனும் பகையுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த நாட்டின் இனங்களிடையே உண்மையான நல்லுறவைக் கட்டியெழுப்பவும் வழிசெய்யும்.

வரலாற்று முக்கியமான தருணத்தில் நடைபெறும் தங்கள் வருகையானது ஈழத்தின் சைவத்தமிழ் இந்துகளின் மட்டுமன்றி முழுதீவிலும் வாழும் மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இறைவனை பிரார்த்திக்கின்றோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts