Ad Widget

தமிழ் மக்களின் உரிமைகளை தாரைவார்த்து கொடுத்துவிடமாட்டோம்; -இரா. சம்பந்தன்

இந்த நாட்டின் நிர்வாக மற்றும் நீதி துறைகளின் அதியுச்ச பதவிகளில் இருந்தவர்கள் 18 ஆண்டுகளாக ஏற்றுக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு இணைப்பை மூன்றே மூன்று ஜே.வி.பியினர் எதிர்த்ததும் நீதிமன்றம் பிரித்ததை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
கேள்வி: அரசு கூட்டமைப்புப் பேச்சால் ஒரு பயனும் இல்லை என்று காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் என்னதான் செய்கிறீர்கள்?

பதில்: கடந்த ஒரு வருடமாக பேச்சு அரசுடன் நாம் நடத்தியிருக்கிறோம். பேச்சு மூலமாக நியாயமான ஓர் அரசியல் தீர்வை நிலைத்து நிற்கக்கூடிய ஓர் அரசியல் தீர்வை பெறுவதுதான் எமது நோக்கம். அத்தகைய ஓர் அரசியல் தீர்வு, எமது மக்களுக்கு அத்தியாவசியமானது; இன்றைய சூழலில் அது மிக அவசியம் என்றே நாம் கருதுகிறோம்.

நாங்கள் மிகவும் விசுவாசமாகவே பேச்சில் ஈடுபடுகிறோம். ஒளிவுமறைவின்றி எமது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் அரசிடம் முன்வைக்கிறோம். ஆனால், நீண்ட காலமாக அரசின் நடவடிக்கைகள் எமக்கு நம்பிக்கை தருவனவாக அமையவில்லை. அவர்கள் பேச்சில் ஈடுபட்டு வருவது உண்மை. ஆனால், பேச்சை முன்னகர்த்தக்கூடிய வகையில் அவர்களது செயற்பாடுகள் அமையவில்லை.

பேசவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக தற்போது, அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் பேச்சில் ஈடுபடுகிறோம். அதிலும் நாங்கள் திருப்தியடைந்திருக்கிறோம் என்று கூறமுடியாது. ஆனால், பேச்சின் மூலமாக ஒரு தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதனால் தற்போதும் பேச்சு தொடர்கின்றது. எங்களது முயற்சி தொடரும்.

இறுதி முடிவு கூடுதலாக அரசின் பங்களிப்பிலேயே தங்கியுள்ளது. ஆனால், எமது மக்களுக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருப்போம்.

கே: பேச்சில் அரசின் போக்கு நம்பிக்கை தருவதாக இல்லாததற்கு என்ன காரணம்?

ப: காரணம் என்னவென்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், பேச்சு மூலம் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு காணப்பட வேண்டும் என்றால் அதற்கான விருப்பம் அவர்களது உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வரவேண்டும். அது விடயம் சம்பந்தமாக அவர்களது சிந்தனை தெளிவாக இருக்கவேண்டும். காரணங்களைத் தேடிப்பிடிக்க நான் எத்தனிக்க மாட்டேன்.

நாங்கள் கூறவேண்டியது என்னவென்றால் பேச்சு மூலமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமாக இருந்தால் அரசின் தற்போதைய போக்கில் நிச்சயமாக, முன்னேற்றகரமான மாற்றம் தேவை என்பதைத்தான்.

கே: வடக்குகிழக்கு மாகாண இணைப்பு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் போன்ற விடயங்களே இப்போது பேச்சுக்கு முட்டுக்கட்டை என்று தெரிகிறது. உங்கள் தரப்போ அல்லது அரசு தரப்போ இந்த விடயங்களில் விட்டுக்கொடுப்பைச் செய்யும் நிலைமை இருக்கிறதா?

ப: பேச்சின் மூலமாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் என்று அடையாளம் காணப்பட்டவை இவை மூன்று மாத்திரமல்ல. வேறு பல விடயங்களும் இருக்கின்றன. ஆனால், டிசெம்பர் மாத ஆரம்பத்தில் அரச தரப்பால் விசேடமாக இந்த மூன்று விடயங்களையும் குறிப்பிட்டு இந்த விடயங்கள் சம்பந்தமாக தங்களுக்கு சில நெருக்கடிகள் இருப்பதாக எம்மிடம் கூறினார்கள். அந்த நெருக்கடிகளுக்கு என்ன காரணம் என்பதை அவர்கள் எமக்குக் கூறவில்லை.

அரசு தெரிவித்த இந்த மூன்று விடயங்கள் சம்பந்தமாகவும், பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் தொடக்கம், அதற்கு பிறகு நடைபெற்ற பேச்சுகளில் காணப்பட்ட இணக்கங்கள் வரை அவர்களுக்கு எடுத்து விளக்கினோம்.

என்னென்ன காரணங்களுக்காக இந்த மூன்று விடயங்களிலும் முட்டுக்கட்டை இருப்பதாக நீங்கள் கூறுவீர்களாக இருந்தால், அந்தக் காரணங்களைப் பற்றி பேசலாம் என்று அரச தரப்பினரிடம் தெரிவித்திருக்கிறோம். அதில் ஒரு விடயமான காணி விடயம் சம்பந்தமாக நாம் தற்போது தொடர்ந்து பேசுகின்றோம். அடிப்படை விடயங்களில் நாம் மிகவும் உறுதியாக இருப்போம். அதைப்பற்றி எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமுமில்லை; தேவையுமில்லை. எமது மக்களுடைய உரிமைகளை நாம் தாரைவார்த்துக் கொடுக்க மாட்டோம். அதை செய்வதற்கு எமக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை.

ஆனால், இரு தரப்பினரும் பேசியே ஒரு தீர்வைக் காணவேண்டி இருக்கிறது. அதையும் நாங்கள் தெளிவாகப் புரிந்திருக்கின்றோம். ஆனபடியால் எந்த விடயங்களாக இருந்தாலும் எங்களுடைய போக்கு நிதானமானதாகத்தான் இருக்கும்.

கே: நீதித்துறையின் ஊடாக அதாவது நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரமே வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் சில ஏற்பாடுகளை, திருத்தங்களைச் செய்வதன் மூலம் வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்கலாம் என்று முன்னாள் நீதியரசர் அண்மையில் உதயனிடம் தெரிவித்திருந்தார். இதைப்பற்றி பேச்சு மேசையில் நீங்கள் ஏதாவது விவாதித்திருக்கிறீர்களா?

ப: இதைப் பற்றி நாம் தெளிவாக பேசியிருக்கின்றோம். வடக்கு, கிழக்கு இணைப்பு எமது கடும் முயற்சியின் காரணமாக அதாவது, இந்திய அரசினூடாக இலங்கை அரசுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள், விசேடமாக மூவர், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் நான் ஆகியோர் பேசியே இந்த இணைப்பை ஏற்படுத்தினோம்.

எங்களுடைய கடும் முயற்சியின் காரணமாகத்தான் வடக்கு, கிழக்கு இணைப்பு ஏற்பட்டது. இலங்கைஇந்திய ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு, கிழக்கு இணைப்பு ஏற்பட்டது. இந்தப் பிரதேசங்களில் சரித்திரரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள், வாழ்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அது மிகவும் நியாயமான நிலைப்பாடு. அதை எவரும் மறுக்கமுடியாது.

1827ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் அரைவீதமே வாழ்ந்தனர். 1881ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்த வீதம் நான்கு. 1921 ஆம் ஆண்டும் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்த வீதம் நான்கு. நாடு சுதந்திரமடைந்த 1948ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் வீதம் ஒன்பது.

1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் வாழ்ந்த வீதம் 13. 1965ஆம் ஆண்டு டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்பட்டபோது கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் வீதம் 19. இறுதியாக 1981 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் வீதம் 25. எனவே, தமிழ்பேசும் மக்கள் அந்தப்பகுதியில் சரித்திரரீதியில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தவர்கள் என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது.

இந்த உண்மையைப் புறந்தள்ளிவிட்டு மக்கள் விடுதலை முன்னணியினர் என்று கூறுகின்ற ஜே.வி.பியினர் மூன்று பேர் போய் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தனர். அந்த மாகாணங்கள் இணைக்கப்பட்டு 18 வருடங்களுக்குப் பிறகு தங்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன என்று கூறினர்.

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கூறும் ஒரு வழக்கை சாதாரணமாக 30 நாள்களுக்குள்தான் தொடுக்கவேண்டும். ஆனால், அவர்கள் 18 வருடங்களுக்குப் பிறகு சென்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஜே.ஆர்.ஜயவர்தனா…. அவர்தான் இணைப்பை உருவாக்கியவர். ஜனாதிபதி பிரேமதாஸ, ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அதனை அங்கீகரித்து தொடர்ந்தும் இணைத்தே வைத்திருந்தனர்.

18 வருடங்களாக நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு வருட வரவுசெலவுத் திட்டத்திலும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு என்ற பிராந்தியத்திற்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதாவது, நாட்டின் நிர்வாக மற்றும் சட்டத் துறைகளின் உச்ச அதிகாரங்களில் இருந்தவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பை 18 வருடங்களாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

ஆனால், மூன்று ஜே.வி.பியினர் சென்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தபோது சரித்திர ரீதியாக அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்த மூன்று தமிழ் மக்கள் அந்த வழக்கில் தாங்கள் தலையிடுவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டார்கள். அது நிராகரிக்கப்பட்டது. அவர்கள் சார்பாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு இடமளிக்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் விசாரணை நடந்த தினம் நான் அறிந்த வகையில் வெளிநாட்டவர்கள், விசேடமாக வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இத்தகைய ஒரு சூழலில்தான் வடக்கு கிழக்கைப் பிரிக்கும் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜே.ஆர்.ஜயவர்தன இணைப்பை ஏற்படுத்திய விதத்தில் நடைமுறைத் தவறு இருப்பதாகக் கூறியே அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த மாகாணங்களை மீண்டும் இணைக்க முடியாதென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. இருந்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எங்களுடைய கருத்தின்படி அது நியாயப்படுத்தக்கூடிய ஒரு தீர்ப்பல்ல. அதை நாங்கள் நாடாளுமன்றத்தில் மிகவும் தெட்டத் தெளிவாகக் கூறியிருக்கிறோம். இதுவிடயம் சம்பந்தமாக, தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அந்த நடைமுறையான தவறை மாற்றுவதற்கு, திருத்துவதற்கு ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருமாறு கேட்டிருக்கிறேன். என்னுடைய கோரிக்கையை எழுத்து மூலமாகவும் கொடுத்திருக்கிறேன்.

ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை அவ்விதமான பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை தாம் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். ஆனபடியால் வடக்கு, கிழக்கு துண்டிக்கப்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுதான் நிலைமை. அது துண்டிக்கப்பட்டதாக இருக்க முடியாது என்பதே எமது கருத்து.

கே: உங்களின் கருத்துப்படி வடக்கு, கிழக்கு இணைப்பு இப்போதும் சாத்தியமானதுதான். தற்போதைய பேச்சின் ஊடாக அதனைச் சாதிக்கலாம் என்று கருதுகிறீர்களா?

ப: நான் ஒன்றையும் பற்றி எதிர்வு கூறப்போவதில்லை. இதற்கு மேலதிகமாக ஒன்றும் நான் சொல்லமாட்டேன். அது என்னவிதமாக நடைபெறும் என்பதைப் பேச்சின்போது ஆராய்வோம். பேச்சை முறிக்கக்கூடிய வகையில் நாங்கள் உங்களுக்குப் பதில் தரமுடியாது. நாங்கள் எதில் உறுதியாக இருப்போமென்பதையே உங்களுக்குச் சொல்ல முடியும். ஏனென்றால், பேச்சு மூலமாக தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வு கிடைக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காகத்தான் மக்கள் எங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்தக் கடமையை நாங்கள் முறையாகச் செய்யவேண்டும். ஆனபடியால் “வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்ற அடிப்படையில் நான் பேசமாட்டேன். நாங்கள் எதில் உறுதியாக இருப்போம் என்பதையே நாங்கள் சொல்கிறோம். பேச்சு நடக்கும்.

கே: இல்லை. நான் முன்னாள் நீதியரசரை செவ்விகண்ட போது வடக்கு, கிழக்கை இப்போதும் இணைக்கலாம் என்று அவர் கூறியிருந்தார். அந்த சாத்தியப்பாடுபற்றிதான் கேட்கிறேன்?

ப: நான் கூறியதன் பிரகாரம், ஜே.ஆர்.ஜெயவர்தன இணைத்த நடைமுறையில் ஒரு தவறு இருப்பதாகக் கூறியே வடக்குகிழக்கு பிரிக்கப்பட்டது. அந்த நடைமுறைத் தவறுகூட இல்லையென்பதுதான் எமது கருத்து.

கே: அந்த நடைமுறைத் தவறு என்ன? சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படாததா?

ப: அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ்தான் வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. மாகாண சபைச் சட்டமென்று ஒரு சட்டமும், அந்த நேரத்தில் உருவாக்கப்பட்டது. மாகாண சபை சட்டத்தின் கீழ்தான் இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் இணையலாம் என்ற ஏற்பாடு கொண்டுவரப்பட்டது.

வடக்கு, கிழக்கை பொறுத்தவரை அவ்விதமாக இணைவதற்கு அந்த மாகாணசபைச் சட்டத்தில் ஒரு விசேடமான நிபந்தனையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இரு மாகாணங்களும் இணைக்கப்படும் போது ஆயுதமேந்தியவர்கள் இருக்கக்கூடாது, போர் முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.

தென்மாகாணங்களைப் பொறுத்தவரை அவ்விதமான நிபந்தனைகள் இருக்கவில்லை. அன்றைக்கு ஜே.வி.பியினரும் ஆயுத மேந்தி தென்மாகாணத்தில் ஒரு கிளர்ச்சியை நடத்திக்கொண்டிருந்தனர். அப்படி இருந்த போதும் தென்மாகாணமும், மேல்மாகாணமும் விரும்பி இருந்தால் இணைந்திருக்கலாம். ஏனென்றால், அவர்களுக்கு நிபந்தனை இருக்கவில்லை.

இது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனை. அது தவறு. அது சட்டத்தின் மூலமாக ஒரு பிராந்தியத்திற்கு, ஒரு மக்களுக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனை. உண்மையில் அந்த விதமான நிபந்தனை முழு நாட்டுக்கும் இருந்திருக்க வேண்டும்.

ஜே.ஆர்.ஜயவர்தன வடக்கு கிழக்கை இணைப்பதற்குச் சிந்தித்த போது இந்த நிபந்தனை அவருக்கு ஒரு தடையாக இருந்தது. ஏனெனில், அந்த நேரத்திலே தமீழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தி இந்திய அமைதிப் படையுடன் மோதிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய கையில் ஆயுதம் இருந்தது. 1987ஆம் ஆண்டு பிற்பகுதியிலும், 1988ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இது நடந்தது.

அப்போது அந்தச் சட்டத்தை சமாளிப்பதற்காக அல்லது அந்த சட்டத்தை கையாள்வதற்காக ஒரு அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஓர் ஒழுங்கு செய்யப்பட்டது.

சாதாரண சட்டத்தை மீறக்கூடிய வகையில் சில ஒழுங்குகளை செய்வதற்கு ஜனாதிபதி ஒருவருக்கு உரித்து இருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆயுதம் ஏந்தியவர்கள் இருந்தாலும்கூட, ஒரு பக்கத்தில் மோதல் நடந்துகொண்டிருந்தாலும்கூட அதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததால், வடக்கு கிழக்கு இணைப்பு நடைபெறலாம் என்ற விதியை அவர் கொண்டு வந்தார்.

அந்த நேரத்தில் இந்திய அமைதிப்படை, தமீழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை களைவதற்கு, அவர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தது. எனவே ஜே.ஆர். தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி இணைப்பு ஏற்படுத்தலாம் என்றார். ஒரு சாதாரண சட்டத்தை ஜனாதிபதி ஒரு விதியின் மூலமாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் மாற்றியமைக்கலாம். அரசமைப்பில் உள்ளதை மாற்ற முடியாது. ஆனால், இது சட்டத்தில் இருந்த விடயம். மாகாணசபைச் சட்டத்தில் இது இருந்தபடியால், ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவசரகால ஏற்பாட்டின் கீழ் இணைப்பைச் செய்தார்.

ஜே.ஆர். அப்படிச் செய்திருக்கக்கூடாது, அது தவறானது என்பதுதான் உயர்நீதிமன்ற நீதியரசருடைய வாதம். அதன் காரணமாகத்தான் அவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பை துண்டித்தனர். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது.

Related Posts