Ad Widget

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கலைக்கும் எண்ணம் எப்போதும் இல்லை!- கஜேந்திரகுமார்

Kajentherakumarவட,கிழக்கு தமிழ்தேசத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பிற்கு முற்றுப்புள்ளியிடுவதற்கு கொள்கை ரீதியான உடன்பாட்டுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தாயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கலைக்கும் எண்ணம் எப்போதும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

கொள்கைரீதியான உடன்பாடு ஏற்பட்டால் கட்சியை கலைத்து விட்டு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

விடயம் குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை குறித்த போலியான கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் கொள்கை ரீதியான உடன்பாடு இல்லாமல் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியும்?

யுத்தத்திற்குப் பின்னால் இனத்தின் உணர்வுகளை, உரிமைகளை மதிக்காத அல்லது புறந்தள்ளும் வகையில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருந்தமையே, நாம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியமைக்கு காரணம்.

ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்தை பிடித்துக் கொண்டு நாங்களும் கூட்டமைப்பிற்குள் இருந்திருந்தால் இன்று எதுவுமேயில்லாத மாகாணசபை முறைமையினை ஏற்று தமிழர்களை சிறீலங்காவின் ஒற்றையாட்சி முறைமைக்குள் தள்ளும் மிகமோசமான வரலாற்றுத் தவறுக்கு நாங்களும் உடந்தையாக மாறியிருப்போம்.

நாம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தோம். மக்கள் எங்களை நிராகரித்தார்கள். அதற்காக நாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை. இந்த மக்களோடு இருக்கிறோம். இந்த மக்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

2010ம் ஆண்டு இருந்த நிலை இன்று இல்லை. மக்கள் எங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஊடகங்கள் எங்களை ஏற்றுக் கொள்கின்றது. தமிழ் இனத்தின் அரசியல் வரலாற்றில் நாமும் தவிர்க்க முடியாத பாகமாக மாறியிருக்கின்றோம்.

எனவே மக்களுடைய விருப்பம் ஒற்றுமை என்றால் மக்களுக்காக கொள்கை ரீதியான உடன்பாட்டுடன் நாங்கள் இணைந்து செயற்பட எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியை கலைத்துவிட்டு நாம் யாருடனும் ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் இணைய தயாரில்லை.

இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் எங்களுடைய தீர்மானங்களுக்காக மக்கள் பெருமிதப்படுவார்கள். அதற்காக அரசியலை மக்கள் மயப்படுத்தும் எங்கள் அரசியல் வேலைத்திட்டத்தை உலகத்தின் ஜனநாயக நாகரீகங்களுக்குட்பட்டு தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

பல அச்சுறுத்தல்களும், எங்களை பின்னடைவு காணச்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்றார்.

Related Posts