Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த ஆனந்த சங்கரி செயற்படுவதாக குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் இருந்து அந்தக் கட்சியை பலவீனப்படுத்த அரசாங்கத்தின் கையாளாக ஆனந்த சங்கரி செயற்படுகின்றார். அவருக்கு மாத்திரம் விசேட பாதுகாப்பு, விசேட சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. அவர் அரசாங்கத்தின் கையாளாக இருப்பதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு உள்ளே அனுப்பி இருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

sineeeththambi-yokeswaran

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடாத் தொகுதிக் கிளை புனரமைப்பு கூட்டம் வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் நடைபெற்ற போது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இங்கு மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையின் சரித்திரத்திலே நீண்டகால வரலாற்றை கொண்ட தமிழ் மக்களின் கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி இருந்திருக்கின்றது என்ற செய்தி உங்கள் எல்லோருக்கும் தெரியும். 1949ம் ஆண்டு தந்தை செல்வா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி 1972ம் ஆண்டு தமிழ் மக்களின் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் தமிழர் கூட்டணியில் இணைக்கப்பட்டதன் நிமிர்த்தம் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி பின்னர் 2004ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை கட்சியாக மாறியுள்ளது.

அத்தோடு இன்று தனது மகாநாடுகளையும் சிறப்பாக நடாத்தி வருகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சி இலங்கையில் உருவாக்குவதில் மிக முக்கியமாக அமைந்தவையாக அப்போது இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக குடியுரிமை பறிக்கப்பட்டமை காரணமாக அவர்களுக்கு ஆதரவாகவும், கிழக்கு மாகாணத்திலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடாத்தப்பட்டமையுடன் கல்லோயாத் திட்டம் உட்பட திட்டமிட்ட குடியேற்றங்கள், இனப்பரம்பலை அழிக்கின்ற வகையில் நடாத்தப்பட்ட வேளையில் தான் தந்தை செல்வா அவர்கள் முன்பு தான் இணைந்திருந்த தமிழ் காங்கிரஸில் இருந்து விலகி வந்து இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.

இலங்கை தமிழரசுக் கட்சி செய்த பாரிய அகிம்சை வழிப் போராட்டங்கள் தான் முதலாவதாக இந்த நாட்டிலே நாங்கள் நீதிமன்றத்திலோ அல்லது அரச திணைக்களத்திலோ தமிழ் மொழியை ஒரு அரச கரும மொழியாக இணைத்துக் கொண்டு சேவையாற்ற வழிவகுத்தது. அது இலங்கைத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்த ஒரு பெரும் சாதனையாகும். மொழிக்காக அவர்கள் சத்தியாக்கிரக போராட்டங்கள் உட்பட்ட அகிம்சை போராட்டங்களை நடாத்தினார்கள். அந்தப் போராட்டங்களினால் தான் இலங்கை அரசாங்கம் ஆட்டம் கண்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காலத்தில் பண்டாரநாயக்கா அவர்கள் தந்தை செல்வாவை அழைத்து அவரோடு பேச்சுவார்த்தை நடாத்தி 1957ம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் சிங்கள மக்களின் எதிர்ப்பும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் காரணமாக அந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்ட போதும் 1965ம் ஆண்டு டட்லி சேனநாயக்காவோடு டட்லி செல்வா ஒப்பந்தத்தை செய்து தமிழ் மக்களுக்காக காணிகளின் பிரச்சனை உட்பட சில விடயங்களில் உடன்பாட்டுக்கு வந்தன. இதன் நிமிர்த்தம் 1965ம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சியாக மாறியது. மூன்று வருடம் இலங்கை அரசாங்கத்திலே இலங்கைத் தமிழரசுக் கட்சி அங்கம் வகித்திருக்கின்றது. ஆனால் அங்கு நடந்தவையெல்லாம் இவர்களை இணைத்து விட்டு ஏமாற்றிய செயற்பாடுதான்.

சிங்கள பேரினவாத அரசுகள் காலா காலங்களில் ஏற்படுத்திக் கொண்ட அனைத்து விடயங்களும் பின்னர் ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்ட விடயங்கள் தான் இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி இவ் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றியது. ஆனால் அதன் பிற்பாடு சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் கூட 1970ம் ஆண்டு இலங்கையில் புதிய குடியரசு யாப்பை கொண்டு வருவதற்கு ஐக்கிய முன்னனி அரசாங்கம் மூலம் அரசியல் நிர்ணய சபையை உரவாக்கியவேளை இதில் இலங்கை தமிழரசுக் கட்சியும் அந்தக் குழுவிலே உள்வாங்கப்பட்டது.

அவர்களும் தமது முன்மொழிவுகளை அரசியலமைப்புக்கு வழங்கியிருந்தார்கள். ஆனால் பெரும்பான்மையை காட்டி அந்த அரசியலமைப்பிலே இலங்கை தமிழரசுக் கட்சி முன்மொழிவுகள் அப்போதைய சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டதால் தான் இலங்கை தமிழரசுக் கட்சி தனியாக இல்லாமல் சகல தமிழ் கட்சிகளையும் இணைத்து தான் தமிழர் கூட்டணியை உருவாக்கி 1972ம் ஆண்டு செயற்படுத்தி வந்தார்கள். இதன் தலைவராக தந்தை செல்வா விளங்கினார்.

1976ம் ஆண்டு வரை தமிழர் கூட்டணியாக இருந்து பின் வட்டுக்கோட்டை மகாநாட்டின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியாக மாறியது. இதில் தந்தை செல்வா, சௌமியன் தொண்டமான், ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற தலைவர்கள் கூட்டு தலைமையாக விளங்கியது. 1977ம் ஆண்டிலே இத்தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் இறங்கினார்கள். ஏன் சொல்லகின்றேன் என்றால் சிலர் கேட்கின்றார்கள். இலங்கை தமிழரசுக் கட்சி தன்னால் முடியாமல் போன காரணத்தினால் தால் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிக் கொண்டது. அப்போதே ஒதுக்கப்பட்டு விட்டது என்று. எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற ஆனந்த சங்கரி போன்றவர்கள் ஊடகங்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏன் செய்தார்கள் என்றால் அப்போது தமிழ் மக்களின் எந்தவொரு அபிப்பிராயங்களும் பெறப்படாமல் தமிழ் மக்கள் சார்பாக இலங்கை அரசாங்கத்திற்கு, இலங்கை தமிழரக் கட்சி கொடுத்த புதிய குடியரசு யாப்புக்கான விடயங்கள் எடுக்கப்படாத காரணத்தினால் ஏனைய தமிழ் பேசும் கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமாக கட்சியாக செயற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் ஏனைய கட்சிகளையும் இணைத்து 1977ம் ஆண்டு தேர்தலிலே நாங்கள் ஒரு தேசிய இனம், எங்களுக்கென தனியான சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்ற வகையில் போட்டியிட்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தினை முன்வைத்து வெற்றியீட்டினர்.

ஆகவே தமிழர்களுக்கான ஒரு தமிழீழ கோரிக்கையை முன்வைத்து அவர்கள் தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. வடகிழக்கிலே கல்குடாத் தொகுதி தவிர ஏனைய அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்கள். கல்குடாத் தொகுதியும் வெற்றிபெறும் நிலை இருந்தது. ஆனால் தேர்தலுக்கு முதல் நாள் நாசிவந்தீவு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சி காரணமாகத்தான் கல்குடாத் தொகுதியில் ஆசனம் இல்லாமல் போனது.

1977ம் ஆண்டிலே கல்குடாத் தொகுதி மாத்திரம் தான் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆசனத்தை வழங்காத இடமாக மாறியது. அந்த கோரிக்கையின் பின்னர் சிங்கள மக்களிடம் ஏற்பட்ட சில கொந்தழிப்பு காரணமாகவும் சில சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகள் சிங்கள மக்களை தூண்டிவிட்டமை காரணமாகவும் பல கிளர்ச்சிகள் ஏற்பட்டு தமிழ் மக்களில் வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன் பின் தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த சாத்வீக போராட்டங்கள் இடமளிக்கவில்லை என்ற காரணத்தினால் தான் இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய சூழலுக்கு ஆளானார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமான போது இதிலே இருந்தவர்கள் மிகவும் உணர்வு படைத்தவர்கள். ஆனால் கூட்டணி உருவாகும் காலத்திலேயே எங்கள் தேர்தல் வெற்றி முடிவு காணும் முன்பே எங்களது தலைவர் தந்தை செல்வா மரணித்துவிட்டார். அதன் பிற்பாடு சிறந்த தலைவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி கொண்டிருந்தது. கூட்டணி தன்னுடைய செயற்பாட்டின் காரணமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றபோது தமிழர் விடுதலைக் கூட்டணி கூடுதலான ஆசனத்தைப் பெற்று இலங்கை அரசாங்கத்திலே எதிர்க் கட்சியாக தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை அமர்த்தியது.

தமிழர் விடுதலைக் கூட்டணி எங்கள் கட்சி. அது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட கட்சி. அதன் பின் இறுதிக் காலத்தில் இருந்த தலைவர் தான் ஆனந்த சங்கரி அவரே தமிழர் விமுலைக் கூட்டியின் துஸய்மையை கெடுத்தவர்.அவர்கள் 2004ம் ஆண்டிலே அப்போது இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை தேர்தலுக்கு ஒழுங்குபடுத்தும் வேளையில் ஆனந்தசங்கரியின் உதயசூரியன் சின்னத்தைக் கேட்டபோது அவர் அதைக் கொடுக்க மறுத்து நீதிமன்றம் சென்றதாலேயே, தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் மீண்டும் உதவியது.

அன்றிருந்து இன்றுவரையும் வீட்டுச் சின்னத்தில் தான் தமிழர் உரிமை காத்துக் கொண்டிருக்கின்றது. இதில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கான ஏனைய கட்சிகளை நாங்கள் குறைகூறவில்லை. தேர்தலிலே அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வகையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே மாகாண சபை தேர்தலிலே தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு ஆசனத்தைப் பெற்றது. டெலோ இரண்டு அசனத்தையும், ஈபிஎல்ஆர்எப் ஒரு ஆசனத்தை பெற்றது எல்லாம் எதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற படியினால் தான் பெற்றது. அவர்கள் தங்களது கட்சியில் நின்று பெறவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற படியினால் தான் மக்கள் வாக்களித்தார்கள். இப்போது என்ன செய்கின்றார்கள் என்றால் இலங்கை தமிழரசுக் கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருக்கின்ற ஒரு சில கட்சிகள் எவ்வாறு தடை செய்யலாம் என்று பார்க்கின்றார்கள்.

அதன் சின்னத்தை திரும்பவும் எவ்வாறு தூக்கி எறியலாம் என்று சிந்திக்கின்றார்கள். அதிலே முக்கியமானவராக ஆனந்த சங்கரியும் இருக்கின்றார். பத்திரிகையிலே பார்த்தேன் மூன்று நான்கு இடங்களில் எனக்கு பேசி இருக்கின்றார். அவர் ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார் நான் பிரதேச வாதம் காட்டுகின்றேன் என்று இதிலே தமிழர் விடுதலைக் கூட்டணியையும், புளொட்டையும் வடக்கு மாகாண கட்சியாக நான் நினைக்கின்றேன் என கூறுகின்றார். தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் தான் உரியது என்று. யார் சொன்னது அது எங்களது வடக்கு கிழக்கு மாகாணத்திற்குரிய கட்சி.

எத்தனையோ தியாகங்களை எங்களது கிழக்கு மாகாண மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்காக செய்திருக்கின்றார்கள். ஆகவே அது வடக்கு கிழக்கு மாகாணத்திற்குரிய கட்சி அவர் இருப்பதால் அது வட மாகாணத்தை மட்டும் என்று கூற முடியாது. அது எங்களுடைய கட்சி. பொருத்தமற்ற ஒருவரின் கையில் இருப்பதாலேயே இதன் மகிமை பாதிக்கப்படுகின்றது.

எங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பிலே ஆரம்பத்திலே அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ இயக்கமும், ஈபிஎல்ஆர்எப் சுரேஷ் அணியும் இலங்கை தமிழரசுக் கட்சியும் இருந்தது. 2011ம் ஆண்டு அளவிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் போன்றவை இணைக்கப்பட்டது. அதிலே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பலம் இருக்கின்றது.

அரசாங்கத்திற்கு வன்னியிலே யுத்தம் நடக்கும் போது எங்கு குண்டு போடலாம் என்று ஆலோசனை கொடுத்தவர் தான் ஆனந்த சங்கரி. ஜனாதிபதிக்கு கடிதம் எழுதித் தள்ளியவர் தான் இவர். அது மாத்திரமல்ல அரசாங்கத்திடம் பணம் பெற்றுக் கொண்டு 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஆசனத்தையும் பெற்றக்கூடாது என்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழர் விடுதலைக் கூட்டணியை களம் இறக்கி போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியை உரவாக்கியவர்.

பின் அரசாங்க ஆலோசனையால் அமைச்சர் ராஜிதசேனாரெத்தின அவர்களின் ஆலோசனையில் அமைச்சரின் வீட்டிலே தமிழர் அரங்கத்தை கூட்டினார்கள் ஆனந்த சங்கரி. அதிலே டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி, மாகாண சபை உறுப்பினர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, அதேபோன்று அரசாங்கத்தோடு சேர்ந்திருந்த ஏனைய தமிழ் கட்சிகள், சித்தாத்தனின் புளோட் கட்சி, ஸ்ரீ டெலோ கட்சி இவர்கள் அனைவரையும் ஆனந்த சங்கரியே கூட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என முயற்சிக செய்தார்.

அதிலும் தோல்வி கண்டதால் எத் தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்க யோசித்தாரோ அதற்குள்ளே வந்து நுழைந்து கொண்டார். இவர்கள் எங்களுக்குள்ளே நுழைய வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தவர்கள். 2011ம் ஆண்டு வட மாகாணத்தில் உள்ளுராட்சி சபை தேர்தல் இடம்பெற்ற போது ஆனந்த சங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து கொண்டனர். இவர்களை இணைத்தது கௌரவ தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் இராஜதந்திர நடவடிக்கையாக இருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் மூன்று பேரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். புளொட் அமைப்பு கூட இந்த யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்டது எங்களின் பங்களிப்பினால் தான் என்று கூறியவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டி இவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்களை கூறி எங்கள் மக்களுக்கு துரோகம் செய்தவர்களை இணைக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இப்போதும் அப்படித்தான் இருக்கின்றோம்.

மூன்று தடவையாக ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட இலங்கைத் தமிழர் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல், மனிதாபிமான நடவடிக்கைகள் மிறல் என்பவற்றுக்காக நீதியை நிலை நாட்டுவதற்கு வாய்ப்பளிக்கின்ற அந்த தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கக் கூடாது, நீ ஐநாவிலே அரசாங்கத்திற்கு எதிராக பேசக் கூடாது என்று அப்போதும் ஆலோசனையை வழங்கிக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி எழுத்து மூலம் கடிதங்களையும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் இருந்து கொண்டே அந்தக் கட்சியை பலவீனப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். ஏன் முயற்சித்துக் கொண்டிருந்தார் அவர் அரசாங்கத்தின் கையாளாக இருப்பதால் தான். அவருக்கு மாத்திரம் விசேட பாதுகாப்பு, விசேட சலுகைகள் அரசாங்கம் கொடுப்பதால் தான் அரசாங்கத்தின் கையாளாக இருந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதனால் இவர் அடிக்கடி ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றார்.

என்னிடம் கேட்டிருக்கின்றார் உனக்கு வரலாறு தெரியாதா? என்று. நான் அவரிடம் கேட்கின்றேன் சபாநாயகருக்கு அவர் கடிதம் எழுதி இருக்கின்றார். 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே கிங்ஸ்லி இராசநாயகம் அவர்களை நானும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வாராசா, அரியநேத்திரன் மற்றும் அடைக்கலநாதன் ஆகியோர் தான் அவரை சுட்டுக் கொலை செய்தோம் என்று அனுப்பியுள்ளார். ஆனந்த சங்கரிக்கு என்ன நடக்கின்றது. வயது கூடியதால் ஏதும் நடக்கின்றதா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

இப்போது ஏனைய இதர கட்சிகள் சில இலங்கை தமிழரசுக் கட்சியை எவ்வாறு பலவீனப்படுத்தலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏனெனில் இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி. கடந்த வருடம் வட மாகாண சபைத் தேர்தலிலே இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போடப்பட்ட உறுப்பினர்களுக்கு வடமாகாண மக்கள் அதிகம் வாக்களித்து விட்டார்கள். எல்லா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களும் மாகாண சபையிலே தெரிவாகி விட்டார்கள். நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று அடையாளம் காட்டாமல் தேர்தலில் இறங்கியதால் இரண்டு ஆசனத்தை பெற்றுக் கொண்டோம். அங்கு அடையாளத்தை காட்டி பிரச்சாரம் செய்தார்கள். அதிலே முதலமைச்சர் உட்பட அனைவரையும் தெரிவு செய்தார்கள்.

இப்போது அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்தினால் தங்களுடைய இருப்பிடம் போய்விடும் என்ற படியினால் அவற்றை நீடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது எப்படியும் நடத்தியேயாக வேண்டும். எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற தேர்தலையும் நடாத்தலாம். விரும்பினால் மாகாண சபையையும் கலைக்கலாம் அப்போது அவதானமாக இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் இது உங்கள் கடமையாகும்.

தற்போது இளைஞர் அணியை வலுப்படுத்துகின்றோம். விரைவில் மகளீர் அணியையும் உருவாக்குவோம். எங்கள் யாப்பில் உள்ள துறைசார் அணிகளையும் உருவாக்கி இக்கட்சியை வளர்க்க நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்றார்.

Related Posts