Ad Widget

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் மகிழ்ச்சியளிக்கிறது: அஸ்கிரிய பீடம்

மகாநாயக்கர்களை சந்திப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனமொன்று அவசியமில்லையென பௌத்த உயர் பீடத்தின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பின் அவசியப்பாடு தொடர்பாக மகாநாயக்கர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக கூட்டமைப்பினர் கூறியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பினரை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள தம்மானந்த தேரர், ஏதேனும் தவறான புரிதல்கள் ஏற்பட்டிருக்குமாயின் குறித்த சந்திப்பில் அவற்றை நிவர்த்திக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டு மக்கள் அமைதியாகவும் சமாதானத்துடனும் வாழ்வதற்கான சுமூகமான சூழலை ஏற்படுத்துவது தமது கடமையென தெரிவித்ததோடு, அதனை கருத்திற்கொண்டே தமது கருத்துக்களையே வெளியிட்டுள்ளதாக தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சில விடயங்களின் தீவர நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவித்த அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர், அதுகுறித்து வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts