Ad Widget

தமிழ் தலைமையில் மாற்றம் அவசியமானது – டக்ளஸ் தேவானந்தா

தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் தலைமையில் மாற்றம் ஏற்படாவிட்டால் எமது மக்களுக்கு எவ்விதமான பயன்களும் கிடைக்கப் போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

daklas

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியினால் முன்னெடுக்க வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமானது.

அதன் பிரகாரம் நடைபெறவுள்ள இத்தேர்தலில் தென்னிலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் தலைமையில் மாற்றமொன்று ஏற்பட வேண்டியது அவசியமானது.

அவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் பட்சத்திலேயே அதனூடாக எமது மக்களும் உரிய பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். இதைவிடுத்து இவ்வாறு மாற்றமொன்று ஏற்படாதவிடத்து எவ்வித பயன்களும் ஒருபோதும் கிடைக்கப் பெறப்போவதில்லை.

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது கட்சியின் நிலைப்பாட்டிலும் நாம் உறுதியாகவே இருக்கின்றோம். அதுமட்டுமன்றி தொடர்ந்து நாம் ஆட்சியில் இருப்பதன் ஊடாகத்தான் எமது மக்களின் வாழ்வாதாரம் மட்டுமன்றி அரசியல் உள்ளிட்ட உரிமைகளையும் வென்றெடுக்க முடியுமே என்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

IMG_9884

ஆனால் ஆட்சி மாற்றத்தினூடாக பலவற்றை செயற்படுத்துவோம் என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினர் இதுவரையில் என்னத்தை சாதித்துள்ளார்கள் என்றும் கேள்வி எழுப்பியதுடன், தொடர்ந்தும் மக்களுக்கு இவர்களால் என்னத்தை சாதிக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு, சமுர்த்தி வேலைத்திட்டங்கள், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெளிவுபடுத்தினார்.

Related Posts