Ad Widget

தமிழ் இளைஞர் , யுவதிகளே பொலிஸ் சேவையில் இணையுங்கள்; கோருகின்றார் வடக்கு டிஜஜி

வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையினை நீக்கும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தினால் ஆட்சேர்ப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ . ஜயசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாணத்தில் தமிழ் பொலிஸ் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சிங்கள மொழி தெரியாதவர்கள் அநேகமானவர்கள் பொலிஸ் நிலையங்களில் தங்களுடைய சேவையினைப் பெற்றுக் கொள்ள வரும் போது நிலையங்களில் தமிழ் பொலிஸார் குறைவாகவே இருக்கின்றனர்.

இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வடக்கு மாகாணத்தில் சேவையாற்றுவதற்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர்களை இணைப்பதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது .

அந்தவகையில் கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , உதவிப் பொலிஸ் பரிசோதகர்கள் பதவிகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

குறித்த பதவிகளுக்கு இணைய விரும்புபவர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் முன்வந்து விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதன் மூலம் தெரிவாகும் விண்ணப்பதாரிகள் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியும்.

இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் பயிற்சிக்காலத்தின் பின்னர் வடக்கு மாகாணத்திலேயே தங்களுடைய சேவைகளை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

Related Posts