Ad Widget

தமிழ் இளைஞர்கள் கொலை வழக்கு: இராணுவத்தினருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சிறுப்பிட்டி கொலை வழக்கில் சந்தேகநபர்களான 14 இராணுவத்தினரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 1997ம் ஆண்டு ஒக்டோபர் 28ம் திகதி மயிலங்காட்டு பகுதிக்கு உறவினருடைய திருமணத்துக்காக சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் இருவரும் சிறுப்பிட்டி புத்தூர் வாதரவத்தையில் அமைந்திருந்த இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அச்சுவேலி பொலிஸாரால் 1998ம் ஆண்டு காலப்பகுதியில் 16 இராணுவ வீரர்களுக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ் வழக்கின் கோவை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் இடப்பட்டது.

சுமார் 18 வருடங்களின் பின்னர் சட்டமா அதிபரினால் இவ்விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு மேற்குறித்த இரு இளைஞர்களையும் கொலை செய்ததன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 16 இராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்றுக்கும் அச்சுவேலிப் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் சந்தேகநபர்களான 16 இராணுவ வீரர்களுக்கும் யாழ் நீதவான் நீதிமன்றால் அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டது.

இதில் 14 இராணுவத்தினர் ஆஜராகியிருந்ததுடன் பீரிஸ் மற்றும் நிமால் எனும் 2 இராணுவத்தினர் கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த 14 இராணுவத்தினரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதவான் சதீஸ்கரன் 14 இராணுவத்திரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts