பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கடத்தப்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு துணை நிற்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதன் பின்னணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் கைதாகியுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குறைந்த பட்சம் தூதரகங்களுக்குக் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தகவல் தெரிவிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்கொலை அங்கி தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இக்கடத்தல் தொடர்பில் கடத்தப்பட்ட இளைஞனின் தாயார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது அங்குவந்த செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பகிரங்கமாகக் குற்றம்சுமத்தியுள்ளார்.