Ad Widget

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடரும் பொய்வாக்குறுதிகள்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும், காணாமற் போனவர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் தீர்க்கமான முடிவு எடுப்பதாகக் கூறியிருப்பது எதிர்வரும் தேர்தலிலும் எமது மக்களை ஏமாற்றும் இன்னொரு செயற்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பு அடிப்படையில் தமிழ், அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதிலும் காணாமற் போன உறவுகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் உடன் எடுக்கப்பட வேண்டும் என்பதிலும் ஈ.பி.டி.பி யினராகிய நாம் உறுதியுடன் இருக்கின்றோம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயங்களை வைத்தும் அரசியல் இலாபமே தேட முனைகின்றது.

கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தமிழர் மாகாண சபை உருவாக்கப்பட்டதும் இவ்விடயங்கள் தீர்க்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்லிவந்தது. எதுவுமே நடக்கவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் இந்த வாக்குறுதியையே கூட்டமைப்பு வழங்கியது.

இதனை நம்பி எமது மக்கள் ஜனாதிபதி மாற்றத்திற்கு வாக்களித்தனர்.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், ஏற்படுத்தப்பட்ட புதிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட தேசிய நிறைவேற்று அதிகார சபையில் பங்கெடுத்து வரும் கூட்டமைப்பிற்கு இந்த விடயங்களைத் தீர்க்க நல்லதொரு வாய்ப்பு கிட்டியது.

ஆனால் கூட்டமைப்பினர் இந்த விடயங்களை தீர்க்காமல் தங்களுக்கு பணமும், சொகுசு வாகனங்களும், சொகுசு வீடுகளும் பெற்றுக் கொண்டனர்.

இப்போது எதிர்வரும் தேர்தலின் பின்னர் இவ்விடயங்கள் தீர்க்கப்படுமென கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இப்படியே தொடர்ந்து வரக்கூடிய தேர்தல்கள் தோறும் கூட்டமைப்பினரின் இந்த வாக்குறுதிகள் தொடருமே அன்றி எமது மக்களின் பிரச்சினைகள் தீரப் போவதில்லை.

போதிய அரசியல் பலம் எமக்கு இருந்திருப்பின், இப்பிரச்சினைகள் எப்போதே, தீர்க்கப்பட்டிருக்கும். எனவே, இம்முறை எமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts