Ad Widget

தமிழ் அரசியல் கைதிகள் முதலமைச்சருக்குக் கடிதம்.

vickneswaranசிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் , தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்து கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதுடன் தமது விடுதலைக்காக உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் முதலமைச்சரிடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளனர் .

பல்வேறு அரசியல் காரணங்களினால் பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக காத்திருப்பதாக் கூறி முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளனர் .

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

பூஸா சிறைச்சாலையில் இருந்து எழுதும் மடல் . முதலில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற முதலமைச்சராகிய உங்களுக்கும் மற்றும் வெற்றிபெற்ற அனைவருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக வாழ்த்தினை தெரிவிக்கின்றோம் .

இந்த வெற்றியானது பல வடுக்களை சுமந்துள்ள எம்மைப் போன்றவர்களுக்கும் எமது உறவுகளுக்கும் புத்துணர்வைத் தருகின்றது . இருப்பினும் , பலவற்றை நம்பியும் எதிர்பார்த்துக் காத்துள்ள எமக்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மீதமாகவுள்ளது .

போராட்டத்தால் பாதிப்புற்ற உறவுகள் பலர் வாழவழியின்றி இருக்கிறார்கள் . வருடக்கணக்கில் , மாதக்கணக்கில் தடுப்பில் இருக்கும் எம்மைப்போன்ற அரசியல் கைதிகளின் நிலை.

கூட்டமைப்பினரிடம் இருந்து ஆரம்பம் முதலே பல உறுதிப்பாடுகளும் வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன . ஆனால் இன்றுவரை எதுவுமே நடைபெறவில்லை . எமது குடும்பங்கள் சாவின் விளிம்பில் உள்ளனர் . எமக்காக வாதாட சட்டத்தரணிகள் இன்றி விடுதலைகள் கேள்விக்குறிகளாகவும் உள்ளன . சாதாரண சவர்க்காரம் வாங்குவதற்கும் கூட பணமின்றி இருக்கின்றோம் . ஆனால் நீங்களோ அமைச்சுப் பதவிகளுக்கு சண்டை இடுகின்றீர்கள் . அது எமக்கு மன வருத்தங்களைத் தருகின்றது .

தயவுசெய்து எம்மைக் காட்சிப் பொருளாகவும் மேடைப்பேச்சுக்களுக்கும் மாத்திரம் பயன்படுத்தாமல் எமது விடுதலைக்கும் உதவிசெய்யுங்கள் . மீண்டும் தேர்தலில் வெற்றியீட்டிய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு எமது விடுதலைக்கும் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது .

Related Posts