சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று முதல் இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.
கடந்த தினங்களில் தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக்கோரி சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக உரிய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
எவ்வாறாயினும் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியின்படி தமக்கு நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்து இவர்கள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு மெகசின் சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 150 கைதிகள் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் ஈடுபட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.