Ad Widget

தமிழ் அரசியல்வாதிகள் கருத்துக்களால் மோதிய நிகழ்வாகிய புத்தகவெளியீடு! நடந்தது என்ன?

(நேரடி செய்தி அறிக்கை )

மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசின் “இலங்கை அரசியல் யாப்பு ‎(1931-2016)” நூல் வெளியீடும் ஆய்வும் இன்று(01.10.2016) சனிக்கிழமை காலை 9 மணியளவில் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.

14495317_10210699783870746_1916247154411600915_n

இந் நிகழ்வில் தலைமையுரையினை பல்கலைக்கழக வரலாற்றுதுறை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களும் , வரவேற்புரையினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் க. அருந்தாகரன் அவர்களும், நூலாய்வினை சிரேஸ்ட ஊடகவியலாளர் வ.தேவராஜா சிறப்புரையினை எழுத்தாளர் நிலாந்தன் அவர்களும் வழங்கினர்.

மேலும் சிறப்புரைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோரும் வழங்கினர்.

பிரதம விருந்தினர் உரையை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் வழங்க இருந்தார் எனினும் முதல்வர் சில காரணங்களினால் வரமுடியாது போகவே அவருடைய உரையை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வாசித்தார். ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்  அடைக்கலநாதன் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தபோதிலும் நிகழ்வுக்கு வருகை தரவில்லலை. புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கண் சத்திரசிகிச்சை காரணமாக வருகை தராததால் அவருக்கு பதில் சிவனேசன் உரையாற்றியிருந்தார்.

நிகழ்வினை ஓர் அரசியல் அறிவுபூர்வமான கலந்துரையாடல் தளமாக நகர்த்திச்செல்லுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் அவர்கள் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார்.

suma-gp

 

தவராசா (வட மாகாணசபை எதிர்க்கட்சித்தலைவர்)

மாகாணசபை எதிர்க்கட்சித்தலைவர்  தவராசா நூல் பற்றி உரையாற்றும் போது வட மாகாண சபை தன்னுடைய வேலையை சரிவர செய்யவில்லை என்று கூறினார். அத்துடன் சிங்களவர்கள் தமிழர்களுடன் நன்றாக இருந்த பல சந்தர்ப்பங்கள் இருந்தன அதைப்பற்றி இந்த நுால் குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிட்டார். அத்துடன் தமிழர்கள் தமக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை குறிப்பாக 2000 ஆண்டில் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டனர் என்று குறிப்பிட்டார். இதன்போது கொதித்தெழுந்த ஒருபகுதி சபையினர் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசாவை கண்டித்து  பேசத்தொடங்கினார்கள்.

“நீங்கள் செய்த அட்டுழியங்கள் கொஞ்சம் நஞ்சமா? எத்தினை பிள்ளைகள கொன்றீர்கள்? மகிந்தவுடன் சேர்ந்து என்ன எல்லாம் செய்தீர்கள் ” “எழுக தமிழ் பேரணியை குழப்பினீர்கள் நீங்க எல்லாம் மனிசரா” என பல கேள்விகளை எழுப்பினர்.ஒட்டுக்குழு உறுப்பினரான நீங்கள் எமக்கு  அரசியல் பற்றி படிப்பிக்க வேண்டாம் என்றனர்.

viber-image9-1024x682

கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாது திணறிய வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா  “நாங்கள் செய்த தவறுகளை மீளாய்வு செய்து  ஏற்றுக்கொண்டு தவறுகளை திருத்திக்கொண்டு  அடுத்தபடி நகரவேண்டும்  என கூறினார். மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகப்பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் விரும்பியதை மட்டும் நான்பேசவேண்டும் என எண்ணக்கூடாது என்றார்.

சுமந்திரன் (நாடாளுமன்ற உறுப்பினர்)

மேலும் சுமந்திரன்  உரையாற்றும்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் எழுக தமிழ் பேரணியையும்    முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கிப்பேசினார். குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார். கடந்த தேர்தலில் அங்கயன் இராமநாதன் எடுத்த வாக்குகளை கூட அவர்களால் எடுக்கமுடியாமல் போனது ஏன் என கேள்வி எழுப்பினார். தாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட படியே  செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். பேச்சைத்தொடங்கும்போது அவையினை அடக்கும் வகையில் நீண்ட பீடிகை போட்டுப்பேசினார்.தன்னை எதிர்ப்பார்கள் என்று தெரிந்து வைத்தவராக பேசினார்.

இவருடய பேச்சின் போதும் முறுகல் நிலை ஏற்பட்டது. சுமந்திரனை சபையினர் சிலர்  “அரசாங்கத்துடன் நீ சேர்ந்து செய்கிறது கொஞ்ச நஞ்சமா” “உடுவில்ல அவ்வளவு பிள்ளைகள் அடிவாங்கக்காரணம் நீதான்” ”நீங்கள் துரோகிகள் ” என   பலவாறு  பேசினர்.”நீ கள்ள ஓட்டிலும் ஏமாற்றியும்தான் வந்தநீ”, தேர்தலின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகள் என்னாச்சு? காணாமல் போனவர்கள் எங்கே அதற்கு முதல் பதில் கூறு என கடுமையான வார்ததைப்பிரயோகங்கள் பிரயோகிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

சபையில் சிலர்  குழப்பம் விளைவித்தபோது சுமந்திரன்  “மென்வலுவானது அமெரிக்காவில் ஆரம்பமாகியது. இது எமது மக்களுக்கு புதிய விடயம்” என்றார். எதிர்ப்புக்குரல் வலுக்கவே சுமந்திரன் கடும்தொனியில் அவர்களை அமருமாறு கூறினார்.

இந்தவேளையில் மாகாணசபை உறுப்பினர்களான சயந்தனும் அயூப் அஸ்மினும் முன்வரிசையில் இருந்து கைதட்டினர். மற்றவர்களுக்கும் அந்த   மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

நிகழ்வின் தலைவரும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தரும் மூத்த பேராசிரியருமான க.சிற்றம்பலம் நிகழ்விற்கு அப்பால் சென்று தேவையற்றவற்றைக் கதைப்பதால் தான் மக்கள் குழப்பமடைகிறார்கள் அவ்வாறு கதைப்பதை தவிருங்கள் என சுமந்திரனை நோக்கிக்கூறினார்.

அதன்போது குறுக்கிட்ட சுமந்திரன் நான்  எதைக் கூறவந்தேனோ அதைக் கூறியே செல்வேன் நீங்கள் தலமைதாங்குவதானால் சரியாக தலமைதாங்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். என்னைப் பேசாதே எனக் கூறமுடியாது நான் என்ன பேசவேண்டும் என்பதை தலைவர் கூறமுடியாது எனக் கூறினார்.

பலருக்கு 2016 இற்குள் தீர்வு வந்துவிடக்கூடாது என்றே விருப்பம் என்றும் அதற்காகவே குழப்பங்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.மக்கள் உங்களை நிராகரித்து விட்டனர் என்றார்.

சுமந்திரனை கேள்வி கேட்ட சபையினரை சுமந்திரனின் மெய்ப்பாதுகாவலர் கடும் வார்தைகளால் திட்டினார். இதனால் வாக்குவாதம் முற்றியது. பின் அங்கிருந்த ஏற்பாட்டாளர்களால் சமரசம் செய்து வைக்கப்பட்டது.

கஜேந்திரகுமார் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

கஜேந்திரகுமார் பேசும்போது நிகழ்வுக்கு வந்தால் அந்த விடயம் பற்றி குறி்ப்பிட்டு பேசவேண்டும் கட்சி அரசியல் பற்றி பேசுவது நல்லதல்ல . என்று தெரிவித்து முதலில் புத்தகத்தைப்பற்றியும் தமிழர் அரசியல் பற்றியும் கதைத்து விட்டு இறுதியாக சுமந்திரனுக்கு தனிப்பபட்ட பதில்களை வழங்கினார். தான்பேசாதவற்றை கூட பேசியதாக  சிலர் கூறியதால் அவர் தனது உரைகளை தான் எப்போதும் பதிவுசெய்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே கடந்த காலப் போரையே நடாத்தினார்கள்.

பூகோளப் போட்டி நடைபெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழருக்காகப் பேரம் பேசும் ஒரேயொரு தரப்பாகவிருந்த நிலையில் முதற்கட்டமாக அந்த அமைப்பை அழிக்க வேண்டும். அந்த அமைப்பை அழிப்பதன் ஊடாக மக்களை அடிபணிய வைத்து அந்த அழிவிற்குப் பின்னாலிருக்கக் கூடிய அரசியல் தலைவர்களை எடுபிடிகளாகப் பாவிப்பதற்கானதொரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்குத் தான் அன்றைய காலகட்டத்தில் காய்கள் நகர்த்தப்பட்டன என்றார்.

தனது உரையில் பூகோள அரசியல் பற்றி நீண்ட விளக்கமளித்தார். சர்வதேசம் தனது நலன்களுக்காக இலங்கையில்  செய்யமுனைகின்ற செய்ற்பாடுகளுக்கிடையில் அந்தச்சந்தர்பத்தை நாம் எமக்குரியதாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். ஐ.நா தீர்மானத்தில் இலங்கைக்கு விட்டுக்கொடுப்பு செய்ய சுமந்திரன் துணையாக இருந்தமைக்கு தான் சாட்சி என்று குறிப்பிட்டார். அதனாலேயே இந்த வேளையில்  இலங்கை்கு சாதகமாக மாற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்ததாகவும் ஆரம்ப  தீர்மானத்தை முற்றுமுழுதாக தான் எதிர்த்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.நாங்கள்தான் மகிந்தவை காப்பற்றுகின்றோம் என்று கூறினார்கள் உண்மையில் தற்போது மகிந்த இராஜபக்சவை பாதுகாப்பது யார் என கேள்வி எழுப்பினார்?

சுமந்திரனோடு 2010 ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தில் இடம்பெற்ற பகிரங்க விவாதத்தில், சர்வதேச சட்டம் என்ற ஒன்று கிடையாது. சர்வதேச அரசியல் தான் இலங்கையில் நடைபெறும் விடயங்களைத் தீர்மானிக்கிறது என நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.சர்வதேச அரசியலை நாங்கள் விளங்கிக் கொள்ளாமலிருந்தால் கிடைக்கிற சந்தர்ப்பங்களை நாங்கள் நழுவ விடுவோம்.இந்த மக்களுக்கு நாம் மிகப் பெரிய துரோகத்தைச் செய்து விடுவோம் என்ற விடயத்தை அப்போது தெளிவாக நான் பதிவு செய்திருந்தேன்.

விடுதலைப்புலிகள் கூட சமஸ்டிக்கு தயாராக இருந்தனர் என்று குறிப்பிட்டார் ஆனால் அவர்கள் தமிழர் தேசம் இறைமை முதலில் அங்கீகரிக்கப்படவேண்டும் என வலியுறுத்தியதாகவும்கூறினார். மறைந்து விட்டார்கள் என்பதற்காக அனைத்தையும் பொய் கூறக்கூடாது.தனது கட்சி இருதேசம் ஒருநாடு கொள்கையில் இருந்து கீழிறங்கவில்லை என்றும் தெரிவித்தார். தமிழ்மக்கள் பேரவையின் திட்டமும்  தேசம் குறிதது பேசுவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழர்   அரசியலில் எந்த தரப்பில்  எந்த நடவடிக்கை எடுத்தாலும் பேரம்பேசலுடன் இடம்பெறவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் நிபந்தனையற்ற ஆதரவையே தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். தமிழர்களுக்கு தற்போது அரசியல்  தலைமை மாற்றம் தேவை என்றும் வலியுறுத்தினார்.

இறுதியில் தன்னையும் தன் கட்சியினையும் விமர்சித்த சுமந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக உரையாற்றினார். சுமார் 20 மணிநேரப் பேச்சு அரங்கம் கைதட்டல்களில் அதிர்ந்தது. சுமந்திரன் அரங்கில் சிரித்தவாறே இருந்தார்.

மக்கள் உண்மையினை உணராவிடில் தங்கள் தலையில் தாமே மண் அள்ளிப்போடுவதற்கு சமம் என்று கூறி அமர்ந்தார்

சுரேஷ் பிரேமச்சந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

பின்னர் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுமந்திரனை தாக்கி தனது கருத்துக்களை வெளியிட்டார். சுமந்திரன்  யாப்பு  நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அங்கு என்ன பேசப்பட்டது  என்ன நடக்கிறது என்று கூறுவார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அவர் அதை பேசாமல் வேறு ஏதோ பேசிவிட்டு போகின்றார் என்று கடுமையாக சாடினார்.

இலங்கை சர்வதேச சக்திகளால் தங்களின் நலன் சார்ந்தே பாவிக்கப்படுகின்றததாக குற்றஞ்சாட்டினார். இலங்கை தமிழ் மக்களுடைய பிரச்சனை என்பது சர்வதேச அமைப்புக்கள் நாடுகள் அவற்றை கையாளுகின்றன என்பதில் யதார்த்தம் இருக்கின்றது அது இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்த போது இந்தியா மேலதிகாரமாக தலையிட்டது.

மேலும், இதற்காக பல நாடுகளின் ஒப்புதல்களை பெற்றார்கள். இது மாத்திரமல்ல பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் மேற்கு நாடுகளில் உள்ளனர்.கனடாவில் ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளார். இதே போல் பிரித்தானியாவில் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தும் அளவில் தமிழர்கள் இருக்கின்றனர்.

இந்த விடயம் என்பது இதன் காரணமாக தான் பொதுநலவாய மாநாடு நடைபெற்ற போதுபிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணம் வரவேண்டிய நிலை வந்தது. அல்லது இந்திய பிரதமர் இலங்கை வந்த போது யாழ்ப்பாணம் வருகை தரவேண்டிய நிலை வந்ததது.

இவை எல்லாம் சாதாரணமான விடயங்கள் அல்ல. இலங்கை சர்வதேச சக்திகளால் தங்களின் நலன் சார்ந்தே பாவிக்கப்படுகின்றது.இது புதிதான விடயம் அல்ல. ஐ.நா அமர்வில் ஒரு தீர்மானம் இலங்கை மீது கொண்டுவரப்பட்டது.

இதில் முதலாவது தீர்மானம் நீக்கப்பட்டு அல்லது முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இரண்டாவது தீர்மானம் இலங்கைக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டது.ராஜபக்சவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் அதற்கு போர்க்குற்றம் இனப்பிரச்சனை என்ற விடயம் கையாளப்பட்டு அதனூடாக ராஜபக்ச அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதற்கு சமாந்தரமாக ராஜபக்ஸ அரசினை கவிழ்க்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.இதன் பின்னர் மேற்குல சார்பு கொண்ட ஐக்கிய தேசிய கட்சி துணையுடன் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது.

ஆகவே சீனாவை கொண்டுவந்த அரசு நீக்கப்பட்டு மேற்குலக நலன் சார்ந்த அரசு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டது.இதன் பின்னர் புதிய அரசுக்கு எதிராக செயற்பட்டால் மீண்டும் ராஜபக்ச வந்துவிடுவார். அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும்.இது தான் அவர்களது நோக்கம் இதற்குள் தமிழர்களுடைய பிரச்சனைகளை அவர்கள் பார்க்கவில்லை.

சர்வதேச விசாரணை ஒன்றின் மூலேமே தமிழ்மக்கள் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் எனஆரம்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சர்வதேச நாடுகளுக்கு தெளிவாக கூறியிருந்தார். இதேவேளை, இறுதியில் அவருடைய வாயும் அடைக்கப்பட்டது என்று கூறினார்

ஆனந்த சங்கரி (தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர்)

ஆனந்த சங்கரி என்னட்ட நிறைய சரக்கிருக்கு என்று சொன்னதும் சபையில் பெரிய சிரிப்பொலி எழுந்தது.தள்ளாத வயதிலும் அவர்செய்த சண்டித்தனங்கள் சபையினரை மகிழ்ச்சியாக வைத்திருந்தது.அவர் பேசும்போது என்னிடம் நிறைய ”சரக்கு” இருக்கு இதை எல்லாம் இ்ங்க சொல்லமாட்டன். இராணுவம் இங்கிருந்து போகும்போது புத்தர்சிலைகளையும் கொண்டு போவாங்களோ எண்டு பத்திரிகையில் ஒரு தலைவர் கேட்கிறார் .

அப்படி என்றால்  எங்கடஆட்கள் அவங்கட இடத்திலஇருந்து திரும்பி வரும்போது வைரவர் சூலத்தையும் கொண்டா வருவினம் எண்டு அவங்கள் கேட்டா என்ன செய்யிறது என்று  நான்கேட்கிறன் . இப்ப இருக்கிற ஆட்களுக்கு தலைக்கணம் என்னுடைய அறிவை பயன்படுத்துவதில்லை.முதலில் மற்றவர்களை மதிக்கப்பழகுங்கள்.  இப்படியான குழப்பவாதிகள் இருப்பதால் தான் நான் இந்தமாதிரி கூட்டங்களுக்கு வருவதில்லை.   சோல்பரி யாப்புத்தான் சிறந்த யாப்பு எமக்கு பொருத்தமானது. இப்ப சொல்லுறன் இந்த புதிய  யாப்பு உருப்படியா அமையாது.

இதன்போது குழப்பம் விளைவித்து எதிர்ப்புக்குரல் எழுப்பிய பார்வையாளர் ஒருவரைப்பார்த்து டேய் தம்பி பைத்தியக்காரத்தனமாக பேசாத இரடா கீழ என்று பேசினார் . விளக்கம் தேவை என்றால்  கூட்டம்முடியாவா பேசுவம் என்றார் .அத்துடன் பாராளுமன்றத்தில் அநுருத்த ரத்வத்தவை பார்த்து  ஆனையிறவை உம்மால் பிடிக்கமுடியாது என்று சொன்னவன் நான் உங்களுக்கு பயப்படமாட்டேன் என்று சங்கரி சொன்னார். தனக்கு வயசு 83 என்ர வயசிலா யாராவது இங்க இருக்கிறீர்களா என்று கேட்டார்.சோல்பரியை நேரில் பார்த்தவன் நான் என்றார்

புளொட்சார்பில் சிவனேசன் பேசும்போது அனைவரதும் மூலோபாயம் ஒன்று தான் தந்திரோபாயம் தான் வேறுபடுகின்றது நாம் எமக்குள் ஒற்றுமையாக இருக்கவேணடும் என்று கூறிச்சென்றார்.

இறுதியாக  நூல் வெளியீட்டில் முதலமைச்சர் உரை வாசிக்கப்படும்வேளை  சுமந்திரன் மகாகாணசபை உறுப்பினர் சயந்தனுடன்  வெளியேறிச் சென்றார். எதிர்ப்பாளர்கள் அவர்பின்னால் சென்றதால் அவசர அவசரமாக  தனது வாகனத்தில் செல்லாமல் வடமாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் வாகனத்தில் வெளியேறினார். சுமந்திரனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.

நிகழ்வில்   பல்கலைக்கழக மாணவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள்  மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் மற்றும் தமிழ்மக்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஆகியோர்   உட்பட பலர்  கலந்துகொண்டனர். பேச்சாளர்களின் சீண்டும் பேச்சுக்களே குழப்பத்துக்கு முக்கிய காரணம் என்று பார்வையாளர் பேசிக்கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போன முதலமைச்சர் தனது உரையினை அனுப்பிவைத்திருந்தார்.  சிற்றம்பலம் அவர்களால் வாசிக்கப்பட்ட
வடமாகாண முதலமைச்சரின் சிறப்புரை  
—————————————————————
நன்றி: காணொளிகள் (பிரபாகரன் , கஜீபன் , நம்நாதம், பரன் )

 

Related Posts