Ad Widget

தமிழ் அரசியல்வாதிகளுக்கு சுமந்திரன் முக்கிய அறிவிப்பு!

20வது திருத்த சட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் எதிராக வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் 20வது திருத்தம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.கே.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இனங்களிடையே சமூக ஒப்பந்தம் ஒன்று இல்லாதவரைக்கும் இந்த நாட்டிலே இனப்பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும்.

ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது ஒரு சட்டம் அல்ல. அதில் ஒரு சட்ட விடயங்கள் இருக்கலாம். ஆனால் அது ஒரு ஒப்பந்தம். ஒரு நாட்டின் மக்களிடையே இருக்கின்ற, அவர்கள் தங்களிடையே ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு ஒப்பந்தம். இதனை சமூக உடன்படிக்கையென்றும் சொல்வார்கள்.

மேலும், அனைத்து கட்சிகளும் நிறைவேற்று அதிகாரமுறை ஒழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடன்தான் இருந்தன. ஆனால் இன்றுவரைக்கும் அது நடக்கவில்லை. மாறிமாறிவந்த ஜனாதிபதிகள் இதனை வைத்தே வாக்கு கேட்டார்கள். ஆனால் செய்யவில்லை.

தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுமானால், இந்த 20வது அரசியலமைப்பினை அவசரமாக கொண்டுவருவதன் தேவையென்ன என்ற கேள்வியெழுகின்றது.

20வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சே இருக்காது. நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென்பதை மும்முரமாக சொல்கின்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புதான்.

எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கின்ற ஒரே காரணத்தினால் எங்களது தீர்மானங்கள் அரசாட்சியில் தாக்கம் செலுத்தாமல் இருப்பதை மாற்றியமைக்கவேண்டும். அதனால் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று கோருவது நாங்கள் மட்டும்தான்.அதிகாரப்பகிர்வு தமிழ் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான அடிப்படை காரணியாகும்.

மத்தியில் இருக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். நாடாளுமன்றத்தின்அதிகாரங்கள் கூட்டப்படவேண்டும்.

நாடாளுமன்றத்தில் இருந்து அதிகாரங்களை ஜனாதிபதி மீண்டும் எடுத்துக்கொள்வது என்பது நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம்.

20வது திருத்ததிற்கு எதிராக நீதிமன்றம் சென்று ஓரளவு வெற்றிபெற்றுள்ளோம். அதிகாரப்பகிர்வு என்கின்ற கோட்பாட்டை நாங்கள் முழுமையாக ஆதரிக்கின்றோம். அது மத்திக்கும் மாகாணத்திற்குமான அதிகாரப்பகிர்வு மட்டுமல்ல.

20வது திருத்த சட்டமூலம் எதிர்க்கப்படவேண்டும், நிறைவேற்றாமல் தடுக்கப்படவேண்டும் என்பது நாங்கள் கட்டாயமாக செய்யவேண்டிய விடயம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts