Ad Widget

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு திங்கட்கிழமை (01.05.2017) பி.ப 3.00 மணியளவில் கைதடிச் சந்தியில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணியுடன் ஆரம்பமாகியது. மேற்படி மோட்டார் சைக்கிள் பேரணியானது, ஏ9 வீதி வழியாக சாவகச்சேரி பஸ் நிலையத்தை அடைந்ததும், அங்கு கூடியிருந்த பல நூற்றுக்கணக்கான பொது மக்களுடன் இணைந்து சாவகச்சேரி வார்வனநாதர் சிவன் கோவில் நோக்கி பேரணியாகச் சென்றது. பி.ப 3.45 மணியளவில் பேரணி சிவன்கோவில் முன்றலை அடைந்ததும் பொதுக்கூட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

பொதுக் கூட்டத்தின் முதல் நிகழ்வாக கட்சியின் கொடியினை பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த மாவீர்ர்களையும், மக்களையும் நினைவு கூர்ந்து ஈகைச் சுடரேற்றப்பட்டது. ஈகைச் சுடரினை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது கரும்புலியாகி தமிழீழ வரலாற்றில் சரித்திரம் படைத்த மாவீரன் மில்லர் அவர்களின் தாயார் திருமதி வல்லிபுரம் கமலாதேவி அவர்கள் ஏற்றிவைக்க, உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் மக்களுக்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மேதின உரைகள் இடம்பெற்றது.

வரவேற்புரையினை கட்சியின் கல்விப் பிரிவு பொறுப்பாளர் இன்னாசிமுத்து சத்தியசீலன் ஆசிரியர் நிகழ்த்தினார்.
நிகழ்வுக்கு தலைமை வகித்த யாழ் பல்கலைக்கழக முன்னாள் உதவிப் பதிவாளர் திரு. யோகேஸ்வரன் ஜெயக்குமார் அவர்கள் தலைமை உரையினை நிகழ்த்தினார்.

தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் கமலநாதன் சிந்துஜன், கட்சியின் முல்லைமாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை விஜயகுமார், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன், திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் ஸ்ரீஞானேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் உபதலைவர்களில் ஒருவருமான தர்மலிங்கம் சுரேஸ், பிரபல சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோ (அதிபர்), கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரது உரைகள் இடம்பெற்றது.

மேற்படி மேதின பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் பிரதானமாக வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்

  • அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும்.
  • காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி கண்டறியவும், இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும்.
  • தமிழர் தாயகத்திலிருந்து ஸ்ரீலங்கா இனவழிப்பு இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும்.
  • இடம்பெயர்ந்து வாழும் மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர உடனடியாக அனுமதிப்படல் வேண்டும்.
  • வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்.
  • தென்னிலங்கை மீனவர்கள் தமிழர் தாயக கடற்பரப்பினுள் நுழைந்து அத்துமீறிய மீன்பிடிபியில் ஈடுபடுவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
  • தமிழர் தாயக கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடிமுறைகள் தடை செய்யப்படல் வேண்டும்.
  • வறட்சியினாலும் வெள்ள அனர்தங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும்.
  • யுத்தத்தினால் அங்கங்களை இழந்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படல் வேண்டும்.
  • முன்னாள் போராளிகளையும், போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் பொருளாதார ரீதியாக முன்னேற்ற உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
  • தமிழர் தாயகத்தை திட்டமிட்ட ரீதியில் சிங்கள பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
  • தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சி அரசியலமைபின் கீழான எந்தவொரு தீர்வையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
  • இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில், சுயநிர்ணய உரிமையின் பிரகாரம், தமிழத் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான தீர்வு அடையப்படல் வேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் பிரதானமாக வலியுறுத்தப்பட்டது.

தொழிலாளர் தின ஏற்பாட்டுக்குழ
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களின் மேதின உரையின் காணோளி

Related Posts